தொடர்ச்சி...
30. निषिध्य निखिलोपाधीन्नेति नेतीति वाक्यतः |
विध्यादैक्यं महावाक्यैर्जीवात्मापरमात्मनोः ||
நிஷித்ய நிகிலோபாதீன்னேதி நேதீதி வாக்யாதஹ |
வித்யாதைக்யம் மகாவாக்யைர்ஜீவாத்மாபரமாத்மனோஹ ||
நேதிநேதி வாக்கினால் நீக்கி உபாதி எலாம்
மீதியாம் சீவான்மா மீதிலா – ஆதியாம்
அப்பரமான்மாக்களின் ஐக்கிய மாவாக்கியங்கள்
செப்புவது ஓர்ந்து தெளி
(இந்தத் தேகம் நானல்ல, எனது இந்திரியங்கள் நானல்ல என்று நாம் பார்க்கும் அனைத்து உபாதிகளையும் வேதாந்த வாக்கின்படி நீக்கிவிட்டு, “இதுவல்ல, அதுவல்ல” என்று சொல்லும் எஞ்சியுள்ள ஜீவான்மாவும், ஆதிப் பரம்பொருளாகிய ஆன்மாவும் ஒன்றே என்று சொல்லும் வேத மகா வாக்கியங்களின் உண்மையை ஆராய்ந்து தெளிவாயாக.)
இருப்பதைக் கொண்டுதான் பறப்பதை அறியவேண்டும். அதனால் நமக்கு நன்கு தெரிகின்ற வஸ்துக்களை
ஆராய்ந்து அவைகளின் உண்மையைத் தெரிந்து கொள்ளும் வழிதான் “நேதி-நேதி” என்று சொல்லப்படும் ஆராய்ச்சி.
அதன் பொருள் “இதுவல்ல-இதுவல்ல” என்பதாகும். நாம் ஒரு வண்டியை ஓட்டுகிறோம், ஆனால் நாமே அந்த வண்டியல்ல என்று சொல்கிறோம் அல்லவா? அதைப் போன்றதே இந்த வழி. நமக்கு உடல் இருக்கிறது, ஆனால் நாம் உடல் அல்ல. அதே போன்று நமக்கு மனம், புத்தி இவைகள் இருக்கின்றன, ஆனால் அவைகளும் நாம் அல்ல. மனத்தில் தோற்றம், புத்தியினால் கிளம்பும் எண்ணங்கள் முதலியனவும் நமக்கு வருகின்றன, ஆனாலும் அவைகள் நாம் அல்ல. இப்படியாக நமக்குத் தோன்றும் எதையும் நாம் பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்கிறோம் என்று சொல்லி அவைகள் எதுவும் நாம் அல்ல என்று நீக்குவதுதான் இந்த வழி. அப்படியானால் அனைத்தையும் நீக்கிவிட்டு எஞ்சி இருப்பது யார் என்று பார்க்க வேண்டும்.
அப்படிப் பார்த்தால், பார்க்கும் ஒருவன் இருக்கிறான் அல்லவா? அவன் யார் என்ற ஒன்றுதானே மிஞ்சும்? அந்தக் கேள்வியையே மிக நுண்ணியதாக அணுகினால், அவன் அப்படிக் கேட்பதற்கோ, உணர்வதற்கோ முன்பேயே அவன் இருந்தாக வேண்டும் அல்லவா? அப்படி இருப்பது ஒன்றே எங்கும், எப்போதும் உள்ள பரமாத்மா என்று வேத மகாவாக்கியங்கள் “அதுவாக நீ இருக்கிறாய்” என்று சாம வேதத்தில் உபதேச வாக்கியமாகவும், “உணர்வே பிரம்மம்” என்று ரிக் வேதத்தில் இலக்கண வாக்கியமாகவும், “இந்த ஆத்மன் பிரம்மம்” என்று அதர்வண வேதத்தில் யுக்தியினால் நிர்ணயிக்கப்படும் சாக்ஷாத்கார வாக்கியமாகவும், “நான் பிரம்மாயிருக்கிறேன்” என்று யஜுர் வேதத்தில் ஒருவனின் அனுபவ வாக்கியமாகவும் கூறப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட பரமாத்மாவும், நேதி-நேதி என்று செய்து மிஞ்சியுள்ள ஜீவாத்மாவும் வேறு வேறு அல்ல என்று ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டும் என்று இங்கு கூறப்பட்டுள்ளது.
இருக்கும் தன்னை விட்டு இல்லாத பலவற்றைப் பிடித்துக்கொண்டு பலவிதமான உபாதிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன், எப்போது அனைத்து உபாதிகளையும் நீக்கிவிட்டு தனது சுய சொரூபத்தைப் பார்க்க முயல்கிறானோ, அப்போதுதான் அவனுக்கு சுயம்பிரகாசமான ஞானம் கிட்டும். அதுவரை ஆத்மா சுயமாகப் பிரகாசித்தாலும், மற்றவைகள் மறைப்பதால் ஆத்மாவின் வீச்சை அவன் உணர முடியாது. மாறாக புத்தி, மனம் போன்ற அந்தக்கரணங்களின் அறிவார்த்தமான இயல்புகளே ஆத்மாவின் இயல்புகள் எனத் தவறாகவும் புரிந்துகொள்ள நேரிடும்.
31. आविद्यकं शरीरादि दृश्यं बुद्बुदवत्क्षरम् |
एतद्विलक्षणं विद्यादहं ब्रह्मेति निर्मलम् ||
ஆவித்யகம் ஷரீராதி த்ருஷ்யம் புத்புதவத்க்ஷ்ரம் |
ஏதத்விலக்ஷணம் வித்யாதஹம் ப்ரஹ்மேதி நிர்மலம் ||
அவித்தையால் ஆனவை ஆக முதற் காணும்
இவை குமிழி போல அழிவெய்தும் – இவற்றின்
அயலாம் அமல அகம் பிரமமாம் என்று
அயராமல் என்றும் அறி
(மாயை எனும் அவித்தையினால் உண்டான உடல் முதலாகக் காணப்படும் இவைகள் யாவும் நீர்க் குமிழிகள் போல அழிந்துவிடும். இவைகளிலிருந்து வேறுபட்ட நிர்மலமான பிரம்மமே “நான்” என்று சிறிதும் சோர்வடையாமல் எப்போதும் அறிந்துகொள்வாய்.)
இல்லாதது இருப்பதுபோலத் தோன்றுவது மாயை. கயிறு பாம்பாகத் தோன்றுவதால் பாம்புதான் மாயை; இருப்பது கயிறுதான். அதுபோல இருப்பு எனும் தன்மை மட்டுமே கொண்ட ஆன்மா, உடலில் தொடங்கி மனம், புத்தி என்று இல்லாத வஸ்துக்களாக தோற்றம் அளிப்பதுதான் மாயை. அதனால் அவை யாவும் பொய்யானது ஆகும். அவைகள் அனைத்தும் ஒரு நாள் இல்லாவிட்டால் மறுநாள் அழியக் கூடியனவாகும். அப்படி அழியக்கூடிய எவைகளாலும் அழியாத சேதனப் பொருளான ஆத்மாவை உணரமுடியாது. உள்ள ஒரே பொருளான ஆத்மாவை உள்ளபடி உணர்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.
கயிற்றை பாம்பு என்று பார்த்துக் கொண்டிருக்கும்வரை அந்தப் பிரமை அகலாது. பார்க்கப்படுவது என்ன என்று முதலில் தோன்ற வேண்டும். அதன் உண்மையை அறிய தேவையான ஒளியும் வேண்டும். அந்த ஒளியும் சரியான கோணத்தில் விழவேண்டும். அப்போதுதான் ஒருவனுக்கு உண்மை தெரிய வரும். அதே போன்று இங்கு முதலில் அழியும்-அழியாத பொருட்களின் தன்மைகளை ஒருவன் அறியவேண்டும். உடல், மனம், புத்தி இவைகள் எல்லாம் ஒருநாள் அழியக்கூடியன என்றால், நமது தினசரி அனுபவங்களிலேயே அவைகள் எப்போது அழிகின்றன, அப்படி அழிந்தும் நாம் இல்லாது போய்விட்டோமா என்று பார்த்து, அவைகள் எல்லாம் நமக்கு இருக்கின்றன என்றால் நாம் யார் என்று நமது தன்மையை நம் அனுபவங்கள் கொண்டே அறிய முயற்சிக்க வேண்டும். அழியும் பலவும் நமக்கு இருந்தாலும், இப்படிக் கேட்டு அறிய முயற்சிப்பவன் யார் என்று பார்க்கும்போது மனம் சிறிதும் தளராது தனது முயற்சியைத் தொடர வேண்டும்.
உலக வழக்கம் என்னவென்றால் அழியும் பொருட்களின் மேல் ஆசை வைப்பதுதான். அந்த மாயையிலிருந்து விடுபட்டு, மீண்டும் அந்தப் பிரமை சாதகனை பிடித்து ஆட்கொள்ளாமல் இருக்க, அழியும் பொருட்கள் மேல் நிராசையும், அழியாத நிர்மலமான பிரம்மமே தான் என்ற நினைப்புடனும் சதா சர்வ காலமும் இருக்கவேண்டும். அத்தகைய நினைப்பு, அறிவாக மாறி, அனுபவமாக ஆகும் வரை சிறிதும் சோர்வடையாமல் இருந்தால் உள்ளதை உள்ளபடி உணர முடியும் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.
32. देहान्यत्वात्र मे जन्मजराकार्श्यलयादयः |
शब्दादिविषयैः सङ्गे निरिन्द्रियतया न च ||
தேஹான்யத்வாத்ர மே ஜன்மஜராகார்ஷ்யலயாதயஹ |
ஷப்தாதிவிஷ்யைஹை சங்கே நிரிந்த்ரியதயா ந ச ||
உடலுக்கு வேறு எனக்கு உண்டாதல் மூத்தல்
ஒடு குன்றல் சாவு முதல் ஒன்றா – படர்ந்த
ஒலி முற்புலன்களோடு ஒன்றால் எனக்கு இன்றே
அலன் பொறிகள் யான் ஆதலால்
(நனவில் இருக்கும் தூல உடல், கனவில் வரும் சூக்ஷ்ம உடல், ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கும் காரண உடல், இம்மூன்று உடல்களிலிருந்தும் நான் வேறுபட்டவன். அதனால் எனக்கு பிறப்பு, முதுமை, உடல் இளைத்தல், இறப்பு முதலான விகாரங்கள் பொருந்தாது. எங்கும் படரக்கூடிய ஒலி முதலான இந்திரிய விஷயங்களும் எனக்குப் பொருந்தாது. நான் இந்திரியங்கள் இல்லாததால் அவைகள் எனக்கு இல்லை.)
வேதாந்த உண்மைகளை மகா வாக்கியங்கள் மூலமாகவோ குரு முகமாகவோ கேட்டறிந்த பின்பு சாதகன் செய்ய வேண்டிய தியான முறை பற்றி இங்கு கூறப்பட்டிருக்கிறது. எது நித்தியமோ அதை மட்டும் பற்றிக்கொண்டு, அநித்தியமானவைகளை அகற்றுவதில் முதல் படியாக உடல் பற்றிய உண்மைகளை இங்கு அறிகிறோம்.
நம்மை யாராவது சுட்டிக் காட்டும்போதோ, அல்லது ஆழ்ந்த தூக்கத்தின் பின்போ நாம் முதலில் காண்பதும், உணர்வதும் நமது ஸ்தூல உடலைத்தான். அதற்கே பிறப்பு, வளர்ச்சி, இறப்பு முதலான பருவங்கள் இருக்கின்றன. அதேபோல நமது கனவில் நாம் உருவாக்கும் ஒரு சூக்கும உடலுக்கும் வெவ்வேறு பருவங்கள் இருப்பது போலத்தான் கனவில் தெரிகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் காரண உடலைப் பற்றி நாம் நன்கு அறியாவிட்டாலும், நமது அனுபவத்தின் படி அதுவும் தினம் தினம் வந்து போவது போலத்தான் அவைகளை நாம் அறிகிறோம். அதாவது தூல மற்றும் சூக்ஷ்ம உடல்கள் அந்தக் காரண உடலில் தினந்தோறும் அடங்கி, பின் எழுகிறது. அப்படி அடங்க முடியாது போனால் சில நாட்களுக்குள்ளேயே தூல உடலும் காணாது மறைந்து விடும் என்பதை நாம் நன்கு அறிவோம். ஆக இவை எல்லாவற்றிற்குமே ஒரு தொடக்கமும், வளர்ச்சியும், முடிவும் இருப்பது நன்கு தெரிகிறது. இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பதும் அல்லாது, இவை அனைத்தையும் சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் “நான்” இவைகள் இருந்தும் வேறுபட்டவன்.
நமது உடல் நமக்குத் தெரிந்த பின்தான் உலகமே நமக்குத் தெரிய வருகிறது. அந்த உலகத்தை நாம் நமது சூக்ஷ்ம ஐம்புலன்களால் அறிகிறோம். ஐம்புலன்களும் செயல்பட அதனதற்கு வேண்டிய தூலக் கருவிகளும் நம்மிடம் இருக்கின்றன. அவைகளும் நமது உடலின் அங்கங்களே. உடலே நாம் அல்ல என்கிறபோது அந்தக் கருவிகளோ, அல்லது அவைகளை இயக்கும் நுண்புலன்களோ நாமாக எப்படி இருக்க முடியும்? அதனால் அவைகளும் நாம் அல்ல. அப்படியென்றால் நம்மை நாமாக எப்போதும் உணர்கிறோமே, அந்த “நான்” யார் என்று கேட்டு, அதைப் பற்றி சதா சர்வ காலமும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இதனை ரமணர் அழகாக தேஹம் (தேகம்), நாஹம் (ந அஹம்), கோஹம் (கோ அஹம்?), சோஹம் (சிவோ அஹம்) என்ற நான்கு சொற்களைக் கொண்டு “உள்ளது நாற்பது- அனுபந்தம்” பாடல் ஒன்றில் இப்படி விளக்குவார்:
தேஹம் கடம் நிகர் ஜடம், இதற்கு அஹம் எனும் திகழ்வு இலதால்
நாஹம்; சடலம் இல் துயிலினில் தினம் உறும் நமது இயலால்
கோஹம் கரன் எவண் உளன்? உணர்ந்து உளர் உளக்குகை உள்ளே
சோஹம் புரண அருணகிரி சிவவிபு சுயம் ஒளிர்வான்.
“இந்த ‘நான்’ என்று கிளம்புகிறவன் யார்? எங்கு இருக்கிறான் என்று ஆராய்ந்து உணர்ந்து இருப்பவர்களின் இதய குகைக்குள்ளே, தானே தானாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் சிவமயமான அருணாசலன் சுயமாக தானே பிரகாசிப்பான்” என்று இங்கு அவர் கூறுகிறார். அதேபோல ஆதி சங்கரர் அவர்களும் இதனையே “மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்” என்று ஆரம்பித்து “சிவானந்த ரூபஹ, சிவோஹம் சிவோஹம்” என்று முடியும் “நிர்வாண ஷடகம்” அல்லது “ஆத்ம ஷடகம்” என்று கூறப்படுகிற ஓர் ஆறு ஸ்லோகத் தொகுப்பில் வலியுறுத்துவார்.
சாதகனின் தவம் எல்லாம் தனக்கு வெளியில் உள்ள விஷயங்கள் அனைத்தும் நிரந்தரமற்றது என்பதாலும், அவைகளைக் காணும் தானே அவைகளை விட முக்கியம் என்பதாலும், அந்த விஷயங்களில் மனத்தை விடாது, அதனால் அவைகளால் கவர்ந்து ஆட்கொள்ளாப்படாது, எப்போதும் தானாக இருக்க முயற்சி செய்து கொண்டிருப்பதே.
33. अमन्स्त्वात्र मे दुःखरागद्वेशभयादय: |
अप्राणो ह्यमनाः शुभ्र इत्यादि श्रुतिशासनात् ||
அமன்ச்த்வாத்ர மே துக்கராகத்வேஷபயாதயஹ |
அப்ராணோ ஹ்யமனாஹா ஷுப்ர இத்யாதி ஷ்ருதிஸாஸநாத் ||
மனம் அலன் ஆதலால் மன்னு துயர் ஆசை
சினம் அச்சம் ஆதி எனைச் சேரா – இனமாக
அப்பிராணன் மனமில்லான் சுத்தன் என்று மறை
செப்புகின்றதன்றோ தெளி
(நான் எண்ணங்களின் தொகுப்பான மனம் அல்ல என்பதால், மனத்தினால் அடையப்பெறும் துயரம், ஆசை, கோபம், அச்சம் முதலானவைகள் என்னைச் சேராத இனங்களாகும். ஆத்மாவாகிய நான் அந்த இனத்தைச் சேர்ந்த பிராணனோ, மனமோ இல்லாதவன். அதனால் மிகவும் தூய்மையானவன் என்று வேத வாக்கியங்கள் சொல்வதை நன்கு உணர்ந்து தெளிவு பெறுவாயாக.)
“எண்ணங்களே மனம் யாவினும் நானெனும் எண்ணமே மூலமாம் உந்தீபற; யானாம் மனம் எனல் உந்தீபற” என்று ரமணர் “உபதேச உந்தியார்” எனும் படைப்பில் சொல்வது “எண்ணங்கள் அனைத்திலும் ‘நான்’ என்று தன்னை அபிமானிக்கும் எண்ணமே மனம் என்றும், அதுவே எண்ணங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான எண்ணம்” என்றும் சொல்கிறார். அது அபிமானிக்கும் “நான்”; எண்ணும் “நான்”. அதற்கு எல்லாவித ஆசை, துயரம் எல்லாம் உண்டு. ஆனால் மேலே சங்கரர் சொல்லும் “நான்” இருப்பாகிய ஆன்மாவே. அது “நான்” எனும் உணர்வாதலால், அதற்கு எந்தவித விகாரங்களும் கிடையாது.
எப்போதும் எதையாவது எண்ணிக்கொண்டு இருப்பதுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. அந்த எண்ணப்படி தன்னிலும் வேறு என்று ஒன்றைப் பார்ப்பதுதான் முதல் படி. அந்த நான்-நீ என்ற பாவனையால், எனது-உனது என்ற வேற்றுமைகள் வளர ஆரம்பிக்கின்றன. அதனால் ஒரு பொருளை “தனது” என்று அடைய விரும்புவதுதான் ஆசை. அது கிடைக்காதோ அல்லது தன்னிடம் தங்காதோ போய்விட்டால் வருவது துக்கம். அது தனக்குக் கிடைத்தும், அது ஒருவேளை தன்னைவிட்டுப் பிறரிடம் போய்விடுமோ என்று எண்ணுவது அச்சம். தன்னிடமிருந்து பிறர் அதை எடுத்துக் கொண்டுவிட்டால் வருவது கோபம். தன்னிடமே அது இருக்கவேண்டும் என்று எண்ணுவது பற்று. மற்றவர் அதைப் பெற்றுவிட்டால் அவரிடம் நமக்கு வருவது வெறுப்பு. இப்படியான வித விதமான உணர்ச்சிகளுக்குக் காரணம் நம் எண்ணங்கள்தான்.
அத்தகைய எண்ணங்களின் தொகுப்பே மனம், அந்த மனமே தன்னை ‘நான்’ என்று அபிமானிக்கிறது. அந்த மனம் போன்ற வர்க்கத்தைச் சேர்ந்ததே பிராணன் எனும் சூக்ஷ்ம சக்தியும். ஆக உடல் எனும் ஜடப்பொருள் அல்லாது, பிராணன், மனம் எனும் சூக்ஷ்ம தேக வர்க்கங்களும் அநித்தியமானவைகள். அதனால் அவைகளும் தள்ளப்பட வேண்டியவைகளே.
ஆனால் மற்ற விஷயங்களுடன் தொடர்பு கொள்ளாது எப்போது ஒருவன் “நான்” என்று தன்னிருப்பை மட்டும் உணர்ந்து தன்னிலே இன்புற்று இருப்பானோ, அப்போது அவனுக்கு மற்ற விஷயங்களில் நாட்டமும் இருப்பது இல்லை. அவை வந்தாலும் அதனால் இன்பமும் இல்லை, போய்விட்டால் அதனால் துன்பமும் இல்லை என்று ஆகிறது. மற்றவர்கள் என்று அவனுக்குத் தெரிந்தாலும், அவர்களும் தன்னைப் போலவே இருப்பவர்கள் என்றுதான் அவனுக்கு இருக்கும். ஆத்ம ஞானம் என்பது எவருடைய தனி அனுபவம் என்றாலும் அது எந்தத் தனி மனிதருடைய சொந்தச் சொத்து அல்ல. சொத்து என்று வந்துவிட்டாலே அதற்கு சொந்தக்காரன் என்றும், அதில் பன்மையும் வந்துவிடும். ஞானம் தொன்றுதொட்டு இருக்கும் அதீத அனுபவம் என்பதாலேயே அதன் துவக்கத்தை வேதத்தினின்று காணலாம் என்பதை உணர்த்தவே இங்கு வேத வாக்கியங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
அதனால் முந்தைய ஸ்லோகத்தில் ஸ்தூலமான பொறி, புலன்களைக் களையச் சொன்னது போல, இங்கு பிராணன், மனம் ஆகிய எந்தவித சூக்ஷ்ம விகாரங்களும் இல்லாது தூய்மையாய் இருப்பதே அந்த “நான்” என்னும் உணர்வு என்று வேத வாக்கியங்கள் சொல்வதால் அதனையே எப்போதும் நினைத்து, அதையே தனது தாரக மந்திரமாக்கி, அதனையே தியானித்து அதன் கருத்தை நன்கு உணர்ந்து தெளிவாய் என்று சொல்லப்படுகிறது.
(தொடரும்)
அதுவே எல்லாமாக இருக்கிறது. அதன்றி வேறுஒன்றும் இல்லை.இருப்பது இல்லாதது எல்லாம் அதுவே.மனிதனின் சிற்றறிவுக்கு இதைத்தாண்டி வேறு ஒன்றும் அறிவது கஷ்டம், இயலாது. நல்ல தொடர். இனிய சிந்தனையை தூண்டிய திரு இராமன் அவர்களுக்கு நம் நன்றிகள்.