ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1

நான் தமிழ் ஹிந்து இணைய தளத்தில் “ஆன்ம போதம்” எழுதத் தொடங்கிய சமயம், எனது நண்பர் Dr. P.S. பர்வதனாதன்,  ரமணரின் “கீதா சாரம்” போலவே “சிவானந்தலஹரீ சாரம்” ஒன்று இருக்கிறது என்று கூறி, கீழ்க்கண்ட விவரங்களையும் சொன்னார். ரமணாஸ்ரம த்தில் உள்ள  நண்பர்கள் மூலம் அது பற்றிய அவர்களது வெளியீடு இருக்கிறதா என்றும், அல்லது  அவர்கள் வெளியீடுகளில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்றும் நான் கேட்டேன். அந்த பத்து ஸ்லோகங்களும் அவ்வப்போது ஆஸ்ரமத்தின் சந்நிதிகளில் பாடப்படுவதாகவும்,  தனியாக வெளியீடு ஒன்று இல்லாது போதும், அந்தப் பத்து ஸ்லோகங்களும் ஸ்ரீ ரமணர் தன் கைப்பட எழுதிய புத்தகம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது என்றும் அறிந்தேன்.

1930-களில் நடந்தது என்னவென்றால்…….

ramanar3ஒருமுறை சென்னையில் காஞ்சி ஸ்ரீ பரமாச்சார்யார் சிவானந்தலஹரியை விளக்கி பல நாட்கள் உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒருநாள், பக்தர்களில் ஒருவர் மகா பெரியவாளை அணுகி, தனக்கு சிவானந்தலஹரியின் நூறு ஸ்லோகங்களையும் தினம் பாராயணம் செய்வது கடினமாக இருப்பதாக ரமண மகரிஷிகளிடம் சொன்னதாகவும் அதற்கு ரமணர் அதில் வெவ்வேறு வரிசையில் வரும் பத்து ஸ்லோகங்களைப் பொறுக்கிக் கொடுத்தார் என்றும் சொன்னார். அப்படிச் சொல்லிவிட்டு, அந்த மாதிரி முழுதும் சொல்லாமல் குறுக்கிய சாரத்தை மட்டும் பாராயணம் செய்வது பற்றி பெரியவரின் அபிப்ராயத்தை அறிய விரும்பினார். அப்படி அவர் கேட்டவுடனேயே “பேஷாகப் பாராயணம் செய்யலாம்; ரமணர் சொன்ன பின் ஏன் இந்தக் கேள்வி?” என்று பதில் கேள்வி கேட்பதன் மூலம், தன் சார்பாகவும் அதை ஆமோதித்தார் என்று கேள்விப்பட்டோம்.

இதுபோல வேறோர் அன்பர் கேட்டதற்கு இணங்க, ரமணர் ஸ்ரீமத் பகவத் கீதையிலிருந்து நாற்பத்தியிரண்டு ஸ்லோகங்களை சாரமாகக் கொடுத்திருக்கிறார். அதை ரமணாஸ்ரமம் “கீதா சாரம்” என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறது. தமிழ் ஹிந்து இணைய தளத்திலும் “கீதா சாரம்” கட்டுரைகள் வந்திருக்கின்றன. “கீதா சாரத்தில்” தான் தேர்ந்தெடுத்த கீதா ஸ்லோகங்களை மூலத்தில் இருக்கும் வரிசையில் இல்லாது, தான் எப்போதும் கூறும் “நான் யார்? என்பதைக் கண்டுபிடி என்ற உபதேசத்தை அறிவுறுத்தும் வகையில், ரமணர்  தன் வரிசையில் கோர்த்திருந்தது போல, இந்த சிவானந்த லஹரியிலும் வரிசை மாறியிருப்பதைக் காணலாம். அதனாலேயே மூலத்தில் உள்ள 61-வது ஸ்லோகம், அந்தப் பத்தில் முதலாவதாக வைக்கப்பட்டிருக்கிறது. அப்படிக் கோர்த்துக் கொடுக்கப்பட்ட பத்து ஸ்லோகங்களும், அதற்கு ரமணரின் பொதுவான உபதேசங்களை ஒட்டிய  விளக்கங்களும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

अंकोलं निजबीजसन्तति रयस्कान्तोपलं सूचिका
साध्वी नैजविभुं लता क्षितिरुहं सिन्धुस्सरिद्वल्लभम् |
प्राप्नोतीह यथा तथा पशुपते: पादारविन्द-द्वयम्
चेतोवृत्ति: उपेत्य तिष्ठति सदा सा भक्तिरित्युच्यते ||1||

அங்கோலம்ʼ நிஜபீ³ஜஸந்ததி ரயஸ்காந்தோபலம்ʼ ஸூசிகா
ஸாத்⁴வீ நைஜவிபு⁴ம்ʼ லதா க்ஷிதிருஹம்ʼ ஸிந்து⁴ஸ்ஸரித்³வல்லப⁴ம் |
ப்ராப்னோதீஹ யதா² ததா² பஶுபதே: பாதா³ரவிந்த³-த்³வயம்
சேதோவ்ருʼத்தி: உபேத்ய திஷ்ட²தி ஸதா³ ஸா ப⁴க்திரித்யுச்யதே ||1||

 (மூல நூலில் சுலோகம் 61)

(ஏறழிஞ்சல் என்னும்) அங்கோல மரத்தை அதன் விதை வரிசைகளும், காந்த சக்தி கொண்ட இரும்புத் துண்டை ஊசியும், தனது கணவனை கற்பு மாறாப் பெண்மணியும், மரத்தைக் கொடியும், கடலை நதியும், இவை ஒவ்வொன்றும் எவ்வாறு நாடி அடைகின்றனவோ, அவ்வாறு மனமானது பரமேஸ்வரனின் பாத இணைக் கமலங்களை அடைந்து, எப்போதும் அங்கேயே நிற்குமானால், அதுவே பக்தி எனப்படும்.

இந்த ஸ்லோகத்தில் பக்தி என்றால்  என்னவென்றும், அதை எப்படிச் செய்யவேண்டும் என்றும், அப்படிச் செய்தால் அதற்கு என்ன பலன் கிடைக்கும் என்பதும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆக முதல் ஸ்லோகத்திலேயே செய்முறையும், பலனும் கூறப்பட்டிருக்கிறது.

தன்னை நாடி வந்து முக்திக்கு வழி கேட்கும் அன்பர்களுக்கு ரமணர் எப்போதுமே அவரவர்களின் கேள்விகளுக்கு ஏற்பவே பதிலும் கொடுப்பார். வரும் ஒவ்வொரு அன்பர்களும் வெவ்வேறு முறையில் ஆன்மத் தியானம் செய்பவர்களாயும், அதில் அவர்கள் வெவ்வேறு முதிர்ச்சி நிலையிலும் இருப்பவர்கள் என்பதாலும் அவர் அப்படிக் கூறியிருக்கலாம். ஆனாலும் எந்த முறையையும் பற்றிச் சொல்லாது உபதேசம் கேட்பவர்களுக்கும், பொதுவாகக் கேள்வி கேட்பவர்களுக்கும், அவர் அப்படிக் கேட்பவர்களைத் தன்னை “நான் யார்?” என்று கேட்டுப் பழகச் சொல்வார்.

அப்படி உபதேசம் பெறுபவர்களில் பலர் அது புரியாமலோ, அல்லது பயிற்சி செய்து பார்த்தபின் அதன் உள்ளர்த்தம் பிடிபடாமலோ இருந்தால், அவரிடம் திரும்பி வந்து அது பற்றி மேலும் வினவ, அவர் “ஆன்ம லாபம் பெறுவதற்கு இரண்டே வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று நான் யார் எனக் கேட்டு விசாரம் செய்து நம்மை அலைக் கழிக்கும் மனத்தைப் பற்றி நீயே அறிந்துகொள்வது, மற்றொன்று என்னிடம் சரணடைவது. அப்போது நான் அந்த மனத்தை அழித்து விடுகிறேன்” என்பார். அதாவது ஆன்மாவை உணர்ந்த ஞானி அல்லது பரமாத்மாவாகிய இறைவனிடம் சரணடை என்பதுதான் அவர் சொன்னதற்கு அர்த்தம். அதைத்தானே “அந்நிய சிந்தை அணுவுமில்லாது என்னைச் சரணடை” என்று பகவான் கீதையில் சொல்கிறார். அதனால் நாம் இந்த முதல் ஸ்லோகத்தைப் பார்த்தவுடன், இது ரமணரது இரண்டாவது வழி என்று தெரிந்து கொள்ளலாம்.

kaveri_riverரமணர் எப்போதும் எதைச் சொன்னாலும், ஒன்றைப் “பொட்டில் அடித்தாற்போல்” என்று சொல்வார்களே அது போல, சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்லி விடுவார். இங்கு அவர் முதலாவதாகத் தேர்ந்தெடுத்திருக்கும் ஸ்லோகத்தில் நாம் பார்க்க வேண்டியது இரண்டு அம்சங்கள். ஒன்று “பரமனின் பாதக் கமலங்களை அடைந்து சரணடைதல், இரண்டாவதாக அடைந்தபின் அங்கேயே நிற்பது”. இதுதான் பரிபூரண சரணாகதி எனப்படுவது. சரணடைந்துவிட்டு இன்னமும் எனக்கு ஏதும் நடக்கவில்லையே என்று எதிர்பார்ப்பதோ, அல்லது “நான் சரணடைந்துவிட்டேன்” என்று  சொல்வதோ அல்லது நினைப்பதோ கூட அர்த்தமற்றது. அப்படி இருப்பவனது சரணாகதி இன்னமும் பூரணமாகவில்லை என்றுதான் அர்த்தம்.

பூரண சரணாகதியை எப்படிச் செய்யவேண்டும் என்பது பல உவமைகள் கொண்டு இங்கு விளக்கப்பட்டிருக்கிறது. அங்கோலம் மரத்தின் விதைகள் மரத்திலிருந்து உதிர்ந்தால், அவைகளை மெல்ல மெல்ல மரம் தன் பக்கமே ஈர்த்துக்கொள்ளும். அதனால் அந்த விதைகள் எல்லாம் அடி மரத்தை நோக்கிப் போகும் திசையில் ஒரு வரிசையில் இருப்பதை எப்போதும் பார்க்கலாம். காந்தம் அருகில் இருக்கும் எந்த இரும்பு ஊசியையும் தன்னை நோக்கி இழுத்துக்கொள்ளும். பத்தினிப் பெண்டிர்கள் தங்கள் தங்கள் கணவனைத் தவிர வேறு எவரையும் மனதால் கூட நினைக்கமாட்டாது அவர்களை நாடி நிற்பார்கள். கொடி ஒன்று படரும்போது அருகில் உள்ள மரம் ஒன்றைத் தழுவி அதனை விடாது பற்றிக்கொண்டு மேலே செல்லும். மலையிலிருந்து புறப்பட்ட ஆறு ஒன்று தன் வழியே சென்று பல மாற்றங்களை அடைந்து வெவ்வேறு மாதிரியாகக் காட்சி அளித்தாலும், இறுதியில் அது கடலை அடைந்து அதன் தனித் தன்மையை அடியோடு இழக்கும்.

இவைகளைப் போல ஜீவாத்மா தான் தனியனாகவும், தனக்கு ஒரு முதலும், முடிவும் உண்டு என்பதை உணர்ந்தவனாகவும் இருக்கும்போது, அவன் முதலும், முடிவும் இல்லாது எங்கும், எப்போதும் இருக்கும் பரமாத்மாவை நாடுகிறான். அப்படி நாடுபவன் ஓர் ஆற்றைப் போலத் தன் தனித்தன்மையை இழக்க வேண்டும்; பரமாத்மாவை விடாது பிடித்துக்கொண்டு ஒரு கொடியைப் போலப் படரவேண்டும்; பத்தினிப் பெண்களின் ஏகச் சிந்தனை போல பக்தனும் பகவானைத் தவிர வேறு எந்த சிந்தையும் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் தன் பக்தனை ஏறழிஞ்சல் விதைகள் போலத் தன்னை நோக்கியும், காந்தத்திற்கு முன் உள்ள ஊசி போலத் தன்னருகிலுமாக பகவானே ஈர்த்துக் கொள்வார்.

भक्तिर्महेश-पदपुष्करं आवसन्ती
कादम्बिनीव कुरुते परितोषवर्षम् |
संपूरितो भवति यस्य मनस्तटाक:
तज्जन्म-सस्यं अखिलं सफलं च नान्यत् ||2||

ப⁴க்திர்மஹேஶ-பத³புஷ்கரம்ʼ ஆவஸந்தீ
காத³ம்பி³னீவ குருதே பரிதோஷவர்ஷம் |
ஸம்பூரிதோ ப⁴வதி யஸ்ய மனஸ்தடாக:
தஜ்ஜன்ம-ஸஸ்யம்ʼ அகி²லம்ʼ ஸப²லம்ʼ ச நான்யத்  ||2||

(மூல நூலில் சுலோகம் 76)

(அந்த) பக்தியானது பரமேஸ்வரனது பதமாகிற வானத்தில் வசித்திருந்து, மேகக் கூட்டத்தைப் போல பேரின்ப மழையைப் பொழிகிறது. எவரது மனமெனும் குளம் அம்மழையால் நிரம்பியதாகிறதோ, அந்த பக்தரது பிறவி எனும் பயிர் முழுதும் பயனளிப்பதாகிறது; மனக்குளம் அவ்வாறு நிரம்பப் பெறாதவரின் பிறவிப் பயிர் அவ்வாறு அமைவதில்லை.

பக்தன் மேலே சொல்லியவாறு இருந்தால் என்ன நடக்கும் என்பதும், அவ்வாறு இருக்க முடியவில்லை என்றால் எது நடப்பதில்லை என்பதும் இந்த ஸ்லோகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.

பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் மற்ற நான்கு பூதங்களோடு ஒரு விசேஷ உறவுத் தன்மை கொண்டுள்ளது. எப்படியென்றால் நீர் ஆகாயத்திலும் இருக்கிறது, பூமியிலும் இருக்கிறது; அது அக்னியால் கொதிபடவும் செய்கிறது, அக்னியை அணைக்கவும் உதவுகிறது; அது வாயு வடிவில் நீராவியாகவும் இருக்கிறது, திட வடிவில் பனிக்கட்டியாகவும் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அது தன் இயற்கை உருவில், திரவ வடிவில் நீராகவே இருக்கிறது. இப்படி எந்த வடிவிலும் நீர் இருப்பது போல, உலகில் எந்த சீவராசிகளை எடுத்துக்கொண்டாலும் அவைகளில் பெரும்பான்மைப் பகுதியாக நீரே இருக்கிறது. அப்படிப்பட்ட விசேஷத் தன்மை கொண்ட நீரை எடுத்துக்கொண்டு இங்கு விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

பஞ்ச பூதங்களிலேயே பரந்து, விரிந்து, எங்கும் இருக்கும் ஆகாயம் பரமனது பதமாக இங்கு எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஆகாயத்தில் குழுமியிருக்கும் மேகக் கூட்டங்களிலிருந்து தக்க சூழ்நிலைகளில் மழை பொழிகிறது. அந்த மழையே நீருக்கு மூலமாக இருந்து, பூமியில் உள்ள குளம், குட்டைகளை நிரப்பி, மலை மேடுகளிலும் விழுந்து ஆற்று நீராகப் பெருகி இங்கு வாழும் சகல உயிர்களின் வாழ்வுக்கும் ஆதாரமாக அமைகிறது. குளம் எப்படி மழையின் வரவுக்கும், அது தரும் நீருக்கும் காத்துக்கொண்டு இருக்கிறதோ, அது போல பக்தனும் பரமனின் கருணை மழைக்கு ஏங்கி நிற்க வேண்டும். அப்படி இருந்தால் அவனது மனமாகிய குளத்தை பரமன் நிரப்பி, அவனது வாழ்வாகிய பயிரை வளம்பெறச் செய்வான்.

சில குளங்கள் மழையால் முழுதும் நிரம்புவதும், சில ஓரளவு நிரம்புவதும், சில சிறிதும் நிரம்பாமல் வறட்சியால் காய்ந்து போவதும் உண்டு. அதே போல ஒவ்வொரு பக்தனும் அவரவர் கர்மத்திற்கு ஏற்ப வெவ்வேறு நிலையில் இருப்பதால், கருணை மழையால் நிரம்பிய பக்தனின் மனம் கொண்டோனுக்கு வாழ்வு இதமாகவும், அப்படி நிரம்பாதவனுக்கு வாழ்வதே சோதனையாகவும் அமையலாம். அது அவரவர் வினைகளைப் பொறுத்ததே.

जनन-मृति-युतानां सेवया देवतानाम्
न भवति सुखलेश: संशयो नास्ति तत्र |
अजनिं अमृतरूपं साम्बं ईशं भजन्ते
य इह परमसौख्यं ते हि धन्या: लभन्ते ||3||

ஜனன-ம்ருʼதி-யுதானாம்ʼ ஸேவயா தே³வதானாம்
ந ப⁴வதி ஸுக²லேஶ: ஸம்ʼஶயோ நாஸ்தி தத்ர |
அஜனிம்ʼ அம்ருʼதரூபம்ʼ ஸாம்ப³ம்ʼ ஈஶம்ʼ ப⁴ஜந்தே
ய இஹ பரமஸௌக்²யம்ʼ தே ஹி த⁴ன்யா: லப⁴ந்தே ||3||

(மூல நூலில் சுலோகம் 83)

பிறப்பு, இறப்பு இவ்விரண்டின் அதிகாரிகளான தேவதைகளைச் சேவிப்பதால் சிறிதும் பயன் இல்லை; இதில் ஐயமே இல்லை. பிறப்பற்ற அமிர்தமயமாயும், அழகாயும் உள்ள அம்பிகையுடன்  ஒளிரும் ஈசனை இவ்வுலகில் யார் ஆராதிக்கிரார்களோ, அவர்களே பிறவிப் பயன் பெற்றவர்கள்; பேரின்பத்தை அடைகிறார்கள்.

shivaperuman17வினைப்பயன் நம்மைத் துரத்தும் என்றால் அதிலிருந்தும் விடுபடுவதற்கு ஏதாவது வழி கிடையாதா என்று அச்சம் கொள்பவர்களுக்கு, இந்த ஸ்லோகம் ஆறுதல் சொல்லி எதைச் செய்து, எப்படி அதிலிருந்து மீளலாம் என்று சொல்கிறது.

தனக்குப் பிறப்பும், இறப்பும் இருப்பதாலேயே அத்தகைய பவங்கள் இல்லாத மகேசன் என்று கேள்விப்பட்ட பரமனைச் சரணடைந்த பக்தனிடம் “உனது வினைப்பயன்கள் உன்னை வாட்டும்” என்று சொன்னால் அவன் தனக்கு விடிவு காலம் பிறப்பதற்கு யாரைத்தான் நாடுவான்? எங்குதான் போவான்? இங்குதான் பலரும் விடிவு காலம் என்றால் உடனே காலத்தைக் கணித்துச் சொல்லும் விதவிதமான சோதிடர்களிடம் சென்று தனக்கு இப்பிறவியிலோ, முற்பிறவியிலோ விட்டுப்போன கர்மாக்களைப் பற்றிக் கேட்டறிந்து அதற்குப் பரிகாரம் உண்டா என்று அறிய விரும்புகிறார்கள். அதன்படி பலவிதமான செயல்களுக்குப் பொறுப்பு எனச் சொல்லப்படும் தேவதைகளைச் சேவிப்பதையும் மேற்கொள்ளுகிறார்கள். அப்படிச் செய்வதால் வரப்போகும் வேதனைகளை ஒருவேளை குறைத்துக் கொள்ளலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அது செய்து முடித்து விட்ட கர்மாக்களுக்கு எதிர்வினையாகப் பயன் தராது. அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். ஆனாலும் இந்த இக்கட்டிலிருந்து மீள்வதற்கு ஒரு வழி இருக்கிறது.

சிவம் என்றாலே எந்தவித சலனமும் இல்லாத உயரிய இறைத்தன்மை எனப்படும். அதனாலேயே “அருணாச்சலம்” என்று புனிதப்பயணம் சென்றுவந்த உறவினர் ஒருவர் சொல்ல, அதைக் கேள்விப்பட்டதும் புளகாங்கிதம் அடைந்த ரமணர், தனது ஆன்ம வடிவை உணர்ந்த பின்னர், கார்த்திகை தீபத்தன்று அம்பிகை ஒன்றி சிவ-சக்தி ஐக்கிய சொரூபமான அருணாச்சலத்தை அடைந்து அங்கேயே ஜீவன் முக்தனாக இருந்தார். எப்போது அந்தச் சலனமில்லாத சிவன் “தான் சிவன்” என்று நினைக்கிறானோ அப்போதுதான் அவன் சலனம் கொண்ட அம்பிகையுடன் சக்தியாக வெளிப்படுகிறான் என்று அர்த்தம். அதுதான் “சிவோஹம்” என்று இருப்பது.

அப்படி வெளிப்படுவதுதான் உலகம் முதற்கொண்டு அனைத்து மாயைகளான லீலைகளுக்கும் அடிப்படையாகும். அந்த உலகத்தில் இருப்பதாக நினைக்கும் பக்தனுக்கும், அவனது வினைத் தளைகள் அறுபடுவதற்கு, நினைத்தாலே அமிர்தம் அருந்தியது போலவும், கற்பனையிலும் காணமுடியாத பேரழகைக் கொண்டவளுமான அம்பாளின் கடைக்கண் பார்வையும், அது தரும் அருள் ஒளியும் வேண்டும். வினைகள் என்றாலே வினை விதைக்கப்பட்ட க்ஷேத்திரமாகிய உலகம் உள்ளதால் அந்த மாயையான உலகை ஆளும் அன்னையை வேண்டி யார் ஆராதிக்கிறார்களோ, அவர்களுக்கே தனக்குத் தாங்களே போட்ட முடிச்சுக்களை அவிழ்க்க முடியும். அவளைத் தஞ்சம் புகுந்தபின், அவர்கள் பிறவிப் பயனான ஆன்மாவை உணர்ந்து, அதற்கும் மேல் எதுவும் இல்லாத பேரின்பத்தை அடைகிறார்கள்.

घटो वा मृत्-पिण्डोsपि अणुरपि च धूमोग्निरचल:
पटो वा तन्तुर्वा परिहरति किं घोर-शमनम् |
वृथा कण्ठ-क्षोभं वहसि तरसा तर्क-वचसा
पदाम्भोजं शम्भो: भज परमसौख्यं व्रज सुधी: ||4||

க⁴டோ வா ம்ருʼத்-பிண்டோ³sபி அணுரபி ச தூ⁴மோக்³னிரசல:
படோ வா தந்துர்வா பரிஹரதி கிம்ʼ கோ⁴ர-ஶமனம் |
வ்ருʼதா² கண்ட²-க்ஷோப⁴ம்ʼ வஹஸி தரஸா தர்க-வசஸா
பதா³ம்போ⁴ஜம்ʼ ஶம்போ⁴: ப⁴ஜ பரமஸௌக்²யம்ʼ வ்ரஜ ஸுதீ⁴: ||4||

(மூல நூலில் சுலோகம் 6)

குடம் என்றும் மண் கட்டி என்றும், அணு என்றும், புகை என்றும் நெருப்பு என்றும் மலை என்றும், துணி என்றும் நூல் என்றும், தர்க்கச் சொற்றொடர்களைக் காட்டி வாதம் செய்து வீணாக தொண்டையை வரட்டிக் கொள்வதால் யாது பயன்? யமனை இது அப்புறப்படுத்துமா? நன் மதி பெற்றவனே! பரமனது கமலப் பாதங்களைப் பணி; பேரின்பத்தை அடை.

சரணடைய வேண்டும் என்று தெரிந்துகொண்ட பின்னர், தன் அறிவுப் பசிக்குத் தீனி போடுவது போல தான் காணும் உலகத்தில் உள்ள பொருட்களை வைத்துக்கொண்டு அனாவசியமாக எதற்கு எது காரணம் என்று, எந்தவித வாதமும் செய்யாமல் உடனே சரணடையும் வேலையில் முழுமூச்சாக இறங்கு  என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.

மகேசனையும், அம்பிகையையும் சரணடைந்தால் போதும் என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் தன் கண்ணால் உலகில் தான் ஸ்தூலமாகக் காணும் பொருட்களையும்,  தன் அறிவால் சூக்ஷ்மமாக உணர்வதுமான எண்ணங்களையும்  விடமுடியாதபடி அவைகளின் மேல் பக்தனுக்கு ஒரு பற்று அமைந்திருக்கலாம். அதனால் அவன் “நெய்க்குத் தொன்னை ஆதாரமா, அல்லது தொன்னைக்கு நெய் ஆதாரமா” என்று கேட்டுக்கொண்டு இரண்டையும் இழந்தாற்போல ஒரு நிலைமை நேரலாம். அவையெல்லாமே அவனது தணியாத அறிவுப் பசியால்தான் என்பதை அவன் உணரவேண்டும். சரணடைந்து விட்டோம், இனி நமக்கு என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அப்படிப்பட்டவர்கள் குடம் என்ற பொருளின் மூல காரணமாக மண் இருப்பதுபோலவும், துணிக்கு நூல் மூலம் போலவும்  ஜீவனுக்குப் பரம்பொருள் என்றும், புகை தெரிந்தால் அங்கு நெருப்பு உண்டு என் பதுபோல் உலகம் இருப்பதால் அதை உருவாக்குபவன் உண்டு என்றும், பெரிதினும் பெரிதாக மலை போலவும், சிறிதினும் சிறிதாக அணு போலவும் இறைவன் இருக்கிறான் என்றெல்லாம் வாதம் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. அப்படிச் செய்வதால் வாதத்திற்கு எதிர்வாதம் என்று செய்கின்ற ஒருவனுடைய தொண்டை வறண்டு போவதுதான் மிச்சம் ஆகும். அத்தகைய வாதங்களால் காலமும் போய்க்கொண்டு, நம்மை இறுதியில் கொண்டுபோகக் காலனும் வந்துவிடுவான். அவனைத் தடுக்க இந்த வாதங்கள் ஏதாவது பயன் தருமா? அதனால் இவை எல்லாவற்றையுமே தவிர்த்துவிட்டு பரமனது பாதங்களில் சரணடைவது ஒன்றையே குறியாக வைத்துக்கொள் என்று இங்கு சொல்லப்படுகிறது.

(தொடரும்)

9 Replies to “ரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1”

 1. திரு இராமன் அவர்கள் மீண்டும் எப்போது எழுதுவார் என்று சிந்திக்க வைக்கும் அவரது தொடர் மீண்டும் ஆரம்பிக்கிறது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது .அவரது பணி தொடர எங்கும் நிறைந்தான் மேலும் மேலும் அருளட்டும். தமிழ் இந்துவுக்கும் நமது நன்றிகள்.

 2. ராமன் அவர்களின் கட்டுரைத் தொடர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரத்தினம், அவரது தொடர்கள் சேர்த்தால் நவரத்தின மாலை எனலாம். அவருக்கு எனது வந்தனங்கள்.

  தளத்தை நிர்வகிபபோருக்கு ஒரு சிறு விஷயம். இந்தத் தொடர்களை நீங்கள் “சைவம்” என்ற tab இல் சேர்த்திருப்பதைக் கண்டேன். சிவப்பரமாகப் பேசுவதால் இது சைவம் ஆகிவிடாது. ஆதிசங்கரரும் ரமணரும் அத்வைதிகளே, இது அத்வைத சம்பிரதாயம், எனவே இதை அத்வைதம் என்ற tab இல் சேர்ப்பதே முறை. முன்பும் ஒருமுறை அத்வைதம் என்ற tab இல் தேடியபோது எனக்கு சில கட்டுரைகள் தென்படவில்லை. எனவேதான் இது பெரிய விஷயம் இல்லை என்றாலும் இதை சொல்கிறேன்.

 3. மிக சிறந்த கட்டுரை…..

  அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தை தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் …..

 4. “அங்கோல மரத்தையதன் விதையும்காந் தத்தையய வூசி யுந்தான்’, மங்காத கற்புடையாள் கொழுநனையும் மரத்தைமலர்க் கொடியும் பாய்ந்து,பொங்கோதை யாறுகடலினையும்போல் மனவிருத்தி புரங்கள் செற்ற, எங்கோனின் மலரடியை எய்தியிருப் பதுபத்தி யென்ப தேமே” (மொழிபெயர்ப்பு கோவை கவியரசு கு.ந.)

 5. “பெருந்தேவன் கழல்வானிற் பிறங்கிடுதொண் டெனுமேகம், இருந்தபே ரின்பமழை பொழியநிறை மனக்குளத்தான் அரும்பிறவி பலன்விளைந்த தாகும் அஃ தில்லாதோன் வரும்தீய பிறப்பவமே வருத்தமுமுழன் றழிந்ததுவே (76) பெருந்தேவன் -மஹாதேவன்.. மனக்குளத்தான் -மனமாகிய குளத்தை உடையவனது. . அரும்பிறவி- அரியபிறவியே. அவம்- வீணானது.

 6. “இன்னல்மிகு பிறப்பிறப்பின் உழலுகின்ற இமையவரை எய்தின் என்னே நன்மையுறும் வீண்ஐயம் இல்லைபிறப் பிலியமுத வடிவன் அம்மை தன்னுருவில் அமரீசன் தாளிணைக்கே மனம்வைத்தார் தாமே பூமேல் மன்னுபர மானந்த வாழ்க்கையராய்ப் பிறவிநலம் வாய்ந்தா ராமே”. சிறு தெய்வம் சேர வேண்டா என உணர்த்தியது இப்பாடல். சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்’ (அப்பர்)

 7. “குடமோமண் ணாங்கட்டி யோஅனுவோ கூர்புகையோ தீயோ நெய்த படமோநூ லோமலையோ போக்குவதோ கொடியயம பயத்தைத் தர்க்கம் விடுமோநன் மதியுடையாய் குரல்வருந்தேல் சம்பு அர விந்தத் தாளைத் திடமோடு நினைவிரைவிற் சிதைவில்பர சுகமெலிதிற் சேர லாமே” (6) இது வீண்தர்க்கம் வேண்டா என்றது. “பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின் வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே” (திருஞானசம்பந்த சுவாமிகள்)

 8. அணுவோ கூர்புகையோ ‘ என ஆறாம் பாடலைத் திருத்திக் கொள்க.

 9. தொடரை வரவேற்றிருக்கும் வாசகர்களுக்கு மிக்க நன்றி. மொத்தமே பத்துச் செய்யுட்கள்தான் என்பதால் இது ஒரு குறுந் தொடர்தான். தேவாரத்தில் இருந்து அது அதற்கு உண்டான தமிழ் செய்யுட்களை எடுத்துக் காட்டியுள்ள திரு. முத்துக் குமாரசாமி அவர்களுக்கும் மிக்க நன்றி. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *