[பாகம் 19] வண்டிக்கார ரிஷி பகர்ந்த பிரம்மஞானம்

சுவாமி சித்பவானந்தர் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் முந்தைய பகுதிகள்:

 

(தொடர்ச்சி...)

சித்பவானந்தரின் சிந்தனைகள் – பிரம்ம ஞானி ரைக்வர்

ஜானசுருதி என்பவர் ஓர் அரசர். அவருடைய கொள்ளுப் பேரனும் புகழ் பெற்ற அரசராக இருந்தார். நாட்டுக்கு நலம்விளைவிப்பதற்கும், நாட்டை பெருமை பொருந்திய நாடாகச் செய்வதற்கும் நற்காரியங்கள் பலவற்றைச்  செய்தார். ஏராளமான சத்திரங்களையும்,  வைத்தியசாலைகளையும்  இவைபோன்ற இன்னும்  பல நற்காரியங்களையும் செய்தார். இவைகளெல்லாம் அவருடைய பெருமையை விளக்கிக் கொண்டிருந்தன. இயற்கையிலுள்ள  ஈரப்பசையை சூரியன் உறிஞ்சி பிறகு  அதை  மழைத்துளியாகத் திருப்பித்தருவது  போன்று குடிகளிடமிருந்து வரியாக வாங்கிய பணத்தை அவர் நற்செயலாக மக்களுக்குத் திருப்பித் தந்தார்.

ஒருநாள் மாலை தம்முடைய நற்பணிகளை எண்ணிச் சிறிது கர்வம் படைத்திருந்தவராக அமர்ந்திருந்தார். அப்பொழுது அவருடைய தலைக்குமேல் ஹம்ஸப்பறவைகளின் கூட்டம் ஒன்று இறக்கைகளை அசைத்துக் கொண்டு கூட்டை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. அவைகள் உண்மையான ஹம்ஸப் பறவைகள் அல்ல. மஹாத்மாக்கள் அந்த ஹம்ஸப் பறவைகளின் வேடம் பூண்டு பரந்த வெளியில் சென்று கொண்டிருந்தனர். அந்த அரசருடைய தலைக்குமேல் அவைகள் சென்றபொழுது அவைகளில் ஒன்று மற்றொன்றினிடம்  சொன்னதாவது: ஜானசுருதியின் பேரன் கீர்த்தி சொர்க்கலோகத்திலும் பரவியிருக்கிறது. இதற்கு மற்ற பட்சி பகர்ந்ததாவது  : ரைக்வரைப் போன்று அவ்வளவு பெரியவரா அவர்! அவ்வரசர் பரந்த உள்ளம் படைத்தவர் என்பது எனக்குத் தெரியும்.  உலகாயத நிலையில் வைத்துப் பார்த்தால் அவர் பெருமைக்கு உரியவரே. அவர் செய்த நன்மைகள் யாவும் லெளகீக மக்களுக்கு  நன்கு  பயன்படும்.  அவருடைய  பெருமையும்  லெளகீக  நிலையோடு  நின்று  விடுகிறது.  அவருடைய நற்செயல்கள் லெளகீகத்தில் உயர்ந்ததொரு ஸ்தானத்திற்கு அவரை எடுத்துச் செல்கின்றன. ஆனால் பிரம்ம ஞானத்தோடு அவருடைய செயல்களை ஒப்பிடுவது எம்மாத்திரம்! ஞானி ரைக்வர் பிரம்மஞானம் பெற்றவர். நற்காரியங்களின் பெருமையாவும் அவருடைய ஞானத்துக்கு எம்மாத்திரம்! புகழ வேண்டுமென்றால் ஞானி ரைக்வரையல்லவா புகழவேண்டும்!

இப்பறவைகளின் சம்பாஷ­ணை அரசன் காதில் விழுந்தது. தேவர்கள் தாம் இப்பறவைகளின்  உருத்தாங்கி  மேலே  பறந்து  கொண்டு  தனக்குப்  பிரம்மஞானம்  என்னும்  பேருண்மையைப் போதிக்கிறார்கள் என்று அரசன் எண்ணினான். தானம் கொடுப்பதும், யக்ஞம் செய்வதும் இத்தரணிக்குரிய புண்ணியச் செயல்களாகும். இவைகளைச் செய்வதால் பிறருக்கு ஏற்படும் நற்பலனைப் போல் நூறுமடங்கு நற்பயன் செய்தவனை வந்தடைகிறது.  பிரம்ம  ஞானத்தைத்தவிர  நாம்  பெறும்  மற்றவைகளுக்கெல்லாம்  ஒரு  முடிவு  உண்டு.  புண்ணியச் செயல்களால்  வரும்  நற்பயன்  நம்மை  முற்றிலும்  திருப்திப்படுத்துவதில்லை.  எவ்வளவு  புண்ணியச்  செயல்கள் செய்தாலும்  மேலும்  நம்மிடம்  குறை  இருந்து  கொண்டே  இருக்கும்.  எனவே  அரசன்  இவ்வுலகத்தில்  செய்துள்ள புண்ணியச் செயல்களைக் கொண்டு திருப்தியடையவில்லை. குறையில்லா நிறைவாழ்வைப் பெற அவன் விரும்பினான். எனவே அப்பறவைகளுடைய சம்பா­ணையை ஆழ்ந்து சிந்தனைசெய்தான். அவனுடைய புண்ணியச் செயல்களெல்லாம் ஒன்று சேர்ந்து அளிக்கும் பயன் ஆத்ம ஞானத்துக்கு எவ்வகையிலும் ஈடாகாது என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது.

ஆத்மஞானத்தைப்  பெறுவதற்குரிய  வழியைக்  காண  அவன் விழைந்தான்.  அதற்கு ரைக்வ  மஹரிஷி´யை  அடைவது  தான்  உரிய  வழி  என்று  தீர்மானித்தான்.  ஆகையால்  அவன்  தன்  சாரதியை ரைக்வமஹரிஷி´ இருக்குமிடத்தை அறிந்து வர அனுப்பி வைத்தான். சாரதி பல இடங்களிலும் அலைந்து பார்த்துவிட்டு  அவரைக் காண இயலவில்லை என்ற முடிவுடன் வந்தான். ஆத்ம ஞானத்தை நாடிச் செல்பவர்கள் ஜனசஞ்சாரமில்லாத தனித்த  இடத்தில் தான் வசிப்பார்கள். ஆற்றங்கரையிலுள்ள மணல்மேடுகள், காடுகள் மலைச்சரிவுகளிலுள்ள குகைகள் போன்ற  இடங்களில்  தான்  அவர்கள்  வசிப்பார்கள்.  இத்தகைய  இடங்களுள்  எங்கேயாவது  ரைக்வரும்  வசிப்பார். மறுபடியும்  சென்று  பார்த்து  வாவென்று  அரசன்  சாரதியை  அனுப்பி  வைத்தான்.  சாரதியும்  அரசனது  ஆணைப்படி  அத்தகைய இடங்களில் ரைக்வரைத் தேட முயற்சித்தான். ஒரு கிராமத்தின் ஜனசஞ்சாரமில்லாத ஒதுக்கிடத்தில் வண்டி ஒன்றுக்குப் பக்கத்தில் ரைக்வர் அமர்ந்திருப்பதைச் சாரதி பார்த்தான்.

அரசன் அவனிடமுள்ள அறுநூறு பசுக்களையும்,  காசுமாலைகளையும்,  சிறுகுதிரைகள்  பூட்டிய  தேரையும்  அவனோடு  எடுத்துச்  சென்று  ரைக்வரிடம்  காணிக்கை பொருள்களாகச் சமர்ப்பித்தான். அரசன் பண்டமாற்றும் முறையில் ஞானத்தைப் பெற்றுவிடலாம் என்று எண்ணினான்  போலும்! ரைக்வர்  அரசனுடைய  மனப்பான்மை  அறிந்து  கொண்டார்.  பொருள்களைக்  கொண்டு ஞானத்தைப்  பெற்றுவிட  முடியாதென்பதையும்,  பரம்பொருளிடத்தில்  தன்னை  முற்றும்  ஒப்படைத்தவன்  தான் ஞானத்தைப் பெறமுடியும் என்பதையும் ரைக்வர் அறிந்திருந்தாராதலால் அரசனுடைய காணிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். அரசன் ஏமாற்றமடைந்தவனாய் வருத்தத்தோடு அரண்மனைக்குத் திரும்பினான். ஆனால் ஞான வேட்கை அவனுடைய உள்ளத்திலிருந்து மறையாது இடம் பெற்றிருந்தது. ஆகையால் அரசன் உலகவி­யத்தில்  அவன்  மனத்தை  ஈடுபடுத்தவில்லை.  ஞானத்தைப்  பெறுவது  எங்ஙனம்  என்ற  சிந்தனையிலேயே ஈடுபடத் தொடங்கினான். மேலும் மேலும் சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவிற்கு வந்தான். தன்னை அந்த ரிஷியிடம் ஒப்படைத்து, அல்லது தனக்குச் சமமான தன் மகளை அந்த ரிஷிக்குக் கன்னிகாதானம் செய்து கொடுப்பது என்பதே அவன்  செய்த  முடிவாகும்.  தன்  மகளை  அழைத்துக்கொண்டு  ரைக்வரிடம்  போய்  அவளை  மனைவியாக ஏற்றுக்கொண்டு தனக்கு உபதேசம் செய்யும்படி கேட்டான்.

இப்பொழுது ரைக்வர் அரசனுக்கு உபதேசம் செய்யச் சம்மதித்தார். மனிதன் குழந்தையாக இருக்கும்பொழுது தன் அன்பைப் பெற்றோர்களிடம் செலுத்துகிறான். மணமானவுடன் அவனுடைய அன்பு மனைவிபால் திரும்புகிறது. குழந்தை பிறந்தவுடன் அவ்வன்பு குழந்தைபால் திரும்புகிறது. எனவே அரசன் தன் மகளை  ரைக்வரிடம்  ஒப்படைத்ததன்  மூலம்  தன்னையே  அவருக்கு  ஒப்படைத்தவனானான்.  அரசனுடைய  வைராக்கியத்தையும், தியாகத்தையும் கண்ட ரைக்வர் ஞானத்தைப் பெறுவதற்கு இப்பொழுது தான் அரசன் தகுதி உடையவனாக இருக்கிறான் என்பதை அறிந்தார். இனி ஞானத்தை அவனுக்குப் புகட்டுவது சரியானதே என்பதையும் ரிஷி´ தீர்மானித்தார். ஆகையால் ரிஷி அவனுக்கு உபதேசம் செய்யச் சம்மதித்தார்.முழுமுதற்பொருள் ஒன்றே.  அவரோடு மற்றவற்றை  இணைக்கும் ஸம்வர்க்க வித்தையை ரிஷி புகட்ட ஆரம்பித்தார்.

நம்மைச் சுற்றிலும் எல்லையில் அடங்காத வெட்டவெளி பரந்திருக்கிறது. நம்மைச் சுற்றிலுமுள்ள எல்லையிலடங்காத வெட்டவெளி போன்று நம்மிடத்தில் அளவிலடங்காத மகிமையிருக்கிறது. அகம்புறம் என்னும் இரண்டிலும் இறைவனுடைய சாந்நித்தியம் இருக்கிறது. இவ்விரண்டையும் ஒன்றுபடுத்துவது  நல்ல  சாதனை  ஆகிறது.  வெளியிலுள்ள  பொருள்களை  யயல்லாம்  வாயு  அல்லது  காற்றில் ஒடுக்கலாம். காற்றின்றி எந்த  ஜீவராசியும் உயிர்வாழமுடியாது. தீ  அணையும்  போது அது வாயுவாகிறது. உதாரணமாக  எரியும்  கற்பூரத்தை  எடுத்துக்  கொள்ளலாம்.  கற்பூரக்கட்டி  எரியும்  பொழுது  ஜ்வாலை  வாயுவாக மாறுகிறது. நீர் கொதிக்கும் பொழுது அது ஆவியாக மாறுகிறது. எனவே நீரும் வாயுவில் ஒடுங்குகிறது.காற்றில்லாவிடில்  சூரிய  ஒளி  பூமியை  அடைய  முடியாது.  சூரிய  ஒளி  இல்லாவிடில்  தாவரங்கள்  அழிந்துபோம். தாவரங்கள்  இல்லாவிடில்  மிருகங்களும்,  மனிதர்களும்  வாழமுடியாது.  ஆகைகயால்  வெளியிலுள்ள  எல்லாப் பொருள்களையும் வாயுவில் ஒடுக்கலாம்.

இனி, அத்யாத்மத்தில் உள்ள யாவும் பிராணனில் ஒடுங்குகின்றன. தூங்கும் போது வாக்கு பிராணனில் ஒடுங்குகிறது. பார்வையும், கேள்வியும், மனதும் ஆகிய யாவும் பிராணனிலேயே ஒடுங்குகின்றன.  பஞ்சபூதங்களை  வாயுவிலும்,  பஞ்சேந்திரியங்களின் இயக்கத்தை  முக்கியப்  பிராணனிலும்
ஒடுக்கலாம். ஆனால்  இவை  இரண்டும்  வெவ்வேறு  பொருள்களல்ல.  இவை  இரண்டும்  ஒரே  பிரம்மத்தின்  இரு தோற்றங்களாகும்.

மேலும்  பிரம்மம்  எங்கும்  இருக்கிறதென்பதை  ரைக்வர்  ஒரு  கதையின்  மூலம் அரசனுக்கு விளக்கினார். ஒரு சமயம் இரு முனிவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அவ்வமயம் பிரம்மஞான நாட்டமுள்ள ஒரு சிஷ்யன் அங்குவந்தான். அவன் தான் ஒரு பிரம்மஞானி என்ற அகம்பாவம்  படைத்திருந்தான். அந்த அகம்பாவத்தோடு அவன் அம் முனிவர்களை சிறிது உணவு தருமாறு கேட்டான். அவனிடமுள்ள அகம்பாவத்தை அறிந்த முனிவர்கள் அவனுக்கு உணவு வழங்க மறுத்தனர். அவன் சிறிதும் கோபம் அடையாதவனாக அவர்களிடம் தன்னிடமுள்ள பிரம்மத்துக்கு இன்று உணவு கிட்டவில்லை என்று பகர்ந்தான். அதற்கு முனிவர்கள் இருவரும் அவனுக்கு ஒரு உண்மையைப் புகட்ட விரும்பி பிரம்மம் உன்னிடம் இருப்பது போன்று எல்லாத் தேவர்களிடமும், எல்லாப் பொருள்களிடமும் தன்னைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படி  எல்லாப்  பொருள்களிடமும்  தம்மைத்  தோற்றுவித்துக்  கொள்வதால்  அவருடைய  மகிமை சிறிதும்  குன்றிப்போவதில்லை  என்று  பகர்ந்தனர்.  இங்ஙனம்  கூறி  அச்சிஷ்யனுடைய  செருக்கை அடக்கி  அவனுக்கு  உணவும்  அளித்தார்கள்.  அவனும்  செருக்கு  நீங்கியவனாக  உண்மையை உள்ளபடி  அறிந்தவனானான்.  இக்கதையில்  தேவர்கள்  என்ற  பதத்தால்  சூரியன்,  நக்ஷத்திரங்கள் போன்ற எல்லாத்  தெய்வங்களையும்,  பொருள்கள் என்ற  பதத்தால்  பஞ்ச பூதங்களாலாகிய எல்லாப் பொருள்களையும், உன்னிடம் என்ற பதத்தால், ஒவ்வொருவரிடமுள்ள அந்தராத்மாவையும் முனிவர்கள்  குறிப்பிடுகின்றனர்.  அஃதாவது ஆதி  தெய்வீகம், ஆதிபெளதிகம்,  அத்யாத்மிகம் ஆகிய எல்லாவற்றிற்கும் பிரம்மமே மூலப்பொருள் என்ற கருத்து விளக்கப்படுகிறது. எல்லாம் பிரம்மத்தின் தோற்றமே. பிரம்மத்துக்கு அப்பால் சூன்யமே. இங்ஙனம் தம்மை வந்தடைந்த அரசனுக்கு ரைக்வர் பிரம்ம ஞானத்தைப் புகட்டினார்.

(ரைக்வர் – ஜானசுருதி வரலாறும் உபதேசமும்  சாந்தோக்ய உபநிஷதத்தில் உள்ளது).

(தொடரும்…,)

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், அன்புக் குரல், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

One Reply to “[பாகம் 19] வண்டிக்கார ரிஷி பகர்ந்த பிரம்மஞானம்”

  1. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
    அந்த தான் பிரம்ம ஞானி என்ற எண்ணம் படைத்திருந்த சிஷ்யன் போலவே உலகில் பலரும் இருக்கிறோம். நமக்கு தேவையான அறிவு ஏற்பட்டு விட்டது, இனிமேல் யாரிடமும் எதுவும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்று நினைக்கிறோம்.
    ஆனால் முழுமையாக எல்லோரிடமும் பர பிரம்மத்தை காணும் வரை, உணரும் வரை செயல் பட வேண்டியுள்ளது.
    மகான்களின் சரிதம் நம்மை எப்போதும் நல்ல வழியில் நடத்தட்டும்.
    நன்றி. வாழ்க பாரதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *