அறியும் அறிவே அறிவு – பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9 | பகுதி 10 | பகுதி 11
(தொடர்ச்சி…)
நனவு கனவு துயில் நாடுவார்க்கு அப்பால்
நனவு துயில் துரிய நாமத்து – எனும் அத்
துரியமதே உளதால் தோன்றும் மூன்றும் இன்றால்
துரிய அதீதம் துணி
பொருள்: விழிப்பு, சொப்பனம், தூக்கம் என்ற மூன்று நிலைகளையும் அனுபவிக்கிற ஜீவனுக்கு அந்த மூன்றுக்கும் அப்பாலாக (அதீதமாக) உள்ள நனவுத் துயிலானது துரியமென்று பெயருள்ளதாயிற்று. அந்தத் துரியமென்ற நிலையே உண்மையானதாய் இருப்பதாலும், தோன்றுகின்ற விழிப்பு முதலான மூன்று நிலைகளும் பொய்யாவதாலும் அந்தத் துரியமே துரியாதீதம் என்று சொல்லப்படும் எனத் தெரிந்துகொள்.
மக்களுக்குப் பொதுவாக வரும் விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளையும் தாண்டி உள்ள சகஜ நிலையில் ஞானிகள் இருப்பார்கள். அது அந்த மூன்று நிலைகளைத் தாண்டியுள்ளதால் அதற்குத் துரியாதீத நிலை என்றும் சொல்லப்படும். அது தூங்காமல் தூங்குவது போன்றதால் அதை நனவுத் துயில் என்றும் சொல்வர். அங்கு அகந்தையும் தோன்றாது, அதன் விளைவான பிரபஞ்சமும் தோன்றாது. ஆனால் அது சதா விழிப்பு நிலையாகவும் உள்ளதால் இயக்கங்கள் நடந்து கொண்டே இருக்கும். சாதா மக்களுக்கு மற்ற மூன்று நிலைகளும் உண்மையாகத் தெரிவதால், அவைகளினின்றும் வேறுபடுத்திச் சொல்வதற்காகவே ஞானியின் நிலை துரியாதீதம் எனச் சொல்லப்படுகிறது.
தூக்கத்திலோ “நாம் இருக்கிறோம்” என்றே தெரியாத ஒரு அறியாமை எனும் இருள்தான் இருக்கிறது. ஆனாலும் அந்த இருளையும் உள்ளடக்கிப் பிரகாசிக்கும் துரிய நிலையில் நிலைத்து நிற்க முடியாதவர்களுக்காக மற்ற மூன்று நிலைகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. துரிய நிலை ஒன்றே உண்மையில் உள்ள நிலை என்னும் போது, மற்ற மூன்றும் பொய்யானதினால், துரிய நிலையை எப்படி நான்காவது நிலை என்று சொல்லமுடியும்? அது ஒன்றே முடிவான நிலை என்றால் துரியாதீதம் என்றும் கிடையாது; இருப்பது ஒன்றே, அது துரியம் எனப்படும் உள்ள நிலையே என்கிறார் ரமணர். அந்த முடிவான நிலையை உணர முடியாது நம்மைத் தடுக்கும் சிலவற்றை முன்பே பார்த்தோம். மேலும் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
மக்கள் மனைவி முதல் மற்றவர்கள் அற்பமதி
மக்கட்கு ஒரு குடும்பம் ஆனவே – மிக்க கல்வி
உள்ளவர் தம் உள்ளத்தே ஒன்று அல பன்னூல் குடும்பம்
உள்ளது யோகத்தடையாய் ஓர்
பொருள்: குழந்தைகள், மனைவி முதலான உறவினர்கள் அற்பமதி உள்ள சம்சாரிகளுக்கு ஒரு குடும்பமாக இருப்பது போல, மிகுந்த கல்வி அறிவு பெற்றவர்களுடைய மனதின் உள்ளே ஒன்று அல்ல, பலவிதமான நூல்களாகிய குடும்பங்கள் இருக்கின்றன. இவை அனைத்துமே யோகத்திற்குத் தடை என்று உணர்வாய்.
உலகியலில் ஈடுபட்டுள்ள சம்சாரிகள் தாம் கடைத்தேற வழி ஒன்று உண்டு என்று தெளிந்து, அதனை நூல்கள் மூலமாகவும் அதை நன்கு விளக்கி வழிகாட்டும் ஆன்றோர்கள் மூலமாகவும் தங்களது முயற்சியைத் தொடங்குகின்றனர். அதுவரை அவர்கள் தனது மனைவி, மக்கள் உள்ளிட்ட குடும்பம் பந்தமாக இருந்தாலும், அவர்களை வழி நடத்தும் செய்கையிலேயே தாங்கள் கடைத்தேற முடியும் என்றும் தெளிகின்றனர். அப்படி அவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் தெளிவதற்கு உதவிய நூல்களும், அவர்கள் மேற்கொள்ளும் வழிகளுமே சில சமயம் தடையாக இருக்கலாம்.
நூல்களை கற்றுணர்ந்ததால் தாம் பண்டிதர்கள் என்றும், மற்றோர் அறியாதவர்கள் என்றும் அவர்கள் மனதில் தோன்றக்கூடும். அது தவிர தானுண்டு, தன் குடும்பம் உண்டு என்று உலகத்தில் உழன்று வந்தவர்கள் இப்போது தன்னையும், உலகையும் தவிர நூல்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களினால் கவரப்பட்டு அவைகளைச் சுற்றிலும் புதிய உலகங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். அதைத் தெரிந்து கொண்டதால் அதைக் காட்டிக்கொண்டு ஒரு மேதமையையும் உருவாக்கிக் கொள்ளலாம். அதனால் தாம் மேற்கொள்ளும் வழி ஒன்றே சரியானதென்றும், மற்ற வழிகள் எல்லாம் நம்மதைவிட தாழ்ந்தவை என்றும் தோன்றலாம். அல்லது நாம் செல்லும் வழிகளில் உள்ள முறைகளில் மட்டும் கவனம் சென்று, எதற்காக அம்முறைகள் சொல்லப்பட்டுள்ளன என்ற அறியாமையினாலும் நாம் தடம் புரளலாம்.
இவை அனைத்துமே நாம் அடக்க நினைக்கும் அகங்காரமானது தூல வடிவினை விட்டு நூல்களைக் கற்றதன் பயனாய் நுண்ணிய வடிவினை எடுப்பதன் விளைவுகளே. ஆக எது நமக்கு உதவும் என நினைத்து அதன் துணையை நாடுகிறோமோ அதுவே நமது முன்னேற்றத்துக்குத் தடையாக அமையலாம். தடைகள் என்று கூடத் தெரியாத அளவுக்கு அவர்களின் நூற்கல்வி அவர்கள் புத்தியை மழுங்கடிக்கலாம்.
அதனால் ஒரு குடும்பம் என்ற நிலை போய், பல நூல்களின் தாக்கத்தால் பல குடும்பங்கள் என்ற வேண்டத்தகாத நிலை வரலாம். நூல்களைக் கற்பதனாலேயே ஒருவன் ஞானி ஆக முடியாது. உலகியலிலும் கசடறக் கற்றபின் அதற்குத் தக நின்றால்தான் ஒருவன் அறிவாளி ஆக முடியும். இல்லையென்றால் அவன் ஒரு வாய்ச் சொல் வீரனாகத்தான் இருக்க முடியும். அதனாலேயே ஆன்மீக உலகில் சாதகன் ஒருவனுக்கு ஒரு குருவின் வழிகாட்டுதல் இன்றியமையாது ஆகிறது. எப்போதும் உள்ளது என்றாலும், முக்கியமாக அப்போது இறைவனின் அருளும் சாதகனுக்கு மிக அவசியம். ஆக முடிவான நிலையை உணர முயற்சிக்கும் சாதகனுக்கு துணிவு என்பதோடு பணிவு என்பதும் வேண்டும்.
அப்படி ஒரு நிலை உள்ளது என்பதை அறியாதவனோ, அல்லது அதை அடைய முயலாதவனோ உலகியல் அறிவு பெறும் கல்வியில் மட்டும் சிறந்து விளங்குவானாக இருந்தால் அவன் நிலைதான் என்ன?
எழுத்து அறிந்த தாம் பிறந்ததெங்கே என்றெண்ணி
எழுத்தைத் தொலைக்க எணாதோர் – எழுத்து அறிந்தென்
சத்தங்கொள் எந்திரத்தின் சால்புற்றார் சோணகிரி
வித்தகனே வேறார் விளம்பு
பொருள்: எண், எழுத்தைக் கற்றோம் என்று அகங்காரம் கொள்ளும் தாம் பிறந்தது எங்கே என்று விசாரித்து தன்னுள் ஆழ்ந்து தம் தலையெழுத்தைத் தொலைக்க நினையாதவர்கள் கல்வி அறிவைப் பெற்றதினால் என்ன பயன்? அவர்கள் (Gramophone, Tape recorder போன்ற) சப்தத்தைக் கிரகித்துக் கொள்ளும் எந்திரத்தின் தன்மையை உடையவர்கள். சோணகிரி ஈசா, உலகில் இவர்களைப் போல வேறு யார் இருக்கிறார்கள்?
உலக வாழ்க்கையில் ஈடுபடத் தேவையான அறிவினைப் பெறுவதற்காக என்றுதான் நாம் அனைவரும் கற்கத் தொடங்குகிறோம். அப்போது மனமானது வெளி உலகில் மிக்க ஈடுபாடு கொண்டுள்ளதால், கற்பதும் உலகியல் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். கற்ற வித்தைகளைக் கொண்டு ஒருவன் பொருள் ஈட்டவும், மேலும் அது தொடர்பாகக் கற்பதும், சமூகத்தில் பலருடன் தொடர்பு கொள்வதும் என்பதான ஒரு சுழற்சியில் உழன்று கொண்டிருப்பவனுக்கு ஏதோ ஒரு சமயம் தன் வாழ்க்கையில் பயனுள்ளதாக ஏதேனும் செய்தோமா, அல்லது வாழ்க்கை என்பதுதான் என்ன என்பது போன்ற கேள்விகள் எழும்.
தினம் தினம் காலையில் எழுந்து தனக்கும், குடும்பத்திற்கும், பின்பு சமூகத்திற்கும் என்று எல்லா வேலைகளையும் செய்துவிட்டு இரவில் உறங்கப் போகும் இந்த வாழ்க்கை தான் வாழ்க்கையா, அல்லது வாழ்க்கைக்கு வேறு ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா என்று தோன்றும்போது தான் ஒருவன் ஆன்மீகத்திற்குத் தயார் ஆகிறான். அதுவரை அவன் மற்றோர் சொல் கேட்டு உலகியலில் ஒரு அங்கமாகவே இறைவனை வழிபட்டோ அல்லது சமூக சேவை செய்தோ தான் பிறருடன் வாழும் வாழ்க்கைக்கு தான் அறியாமலேயே ஓர் அர்த்தம் தேடிக்கொண்டு இருப்பான்.
தெரியாமல் ஒன்றைச் செய்வதை விட தெரிந்து செய்வது மேன்மையானது என்றால், செய்வதன் அடிப்படை நோக்கத்தைத் தெளிந்து செய்வது அதனினும் மேல் அல்லவா? பல பேருக்கு இது வாழ்க்கையில் எழுந்து, விழுந்து பட்ட அடிகளினாலே தான் தெரிய வரும். முன்வினைப் பயனாய் ரமணர் போன்ற வெகு சிலருக்கே “அருணாசலம்” என்ற ஒரு சொல் கேட்ட மாத்திரத்திலேயே உள்ளுணர்வு மிகுந்து ஆன்மீக நாட்டம் ஏற்படும். மற்றோர்களுக்கு கேட்டு, படித்து, அனுபவப்பட்டே அந்த நிலை வரும். சிலருக்கு அதுவும் இப்பிறவியில் வராது போகலாம். அது அவரவர் முன்பு செய்த வினைகளைப் பொறுத்தது.
அப்படி ஆன்மீகத்தில் உந்தப்பட்ட சிலர் தனது கல்வியினாலும், அது தரும் போதனைகளாலும் உலகைப் பற்றியும், ஆன்மாவைப் பற்றியும் தனது புத்தியளவில் அறிந்து கொண்ட ஒரு சில கருத்துக்களைத் திருப்பித் திருப்பி கிளிப் பிள்ளைகளைப் போலச் சொல்லிக் கொண்டு மட்டும் இருந்தால் என்ன பயன்? அவர்கள் தாம் கற்றதன்படி தன்னைத் தானே விசாரித்து, கற்றவன் யார் எனத் தன் சுய சொரூபத்தை உணர முயலவில்லை என்றால், அவர்களது நூலறிவு ஒலிப்பதிவு சாதனங்களான கிராமபோன் அல்லது டேப் ரிகார்டர் போன்றதுதான். ஒரு வேளை கேட்போருக்குப் பயனளிக்கலாம். மனம் விசாரத்தில் ஈடுபடாத வரை, சொல்பவருக்கு அதனால் எந்தப் பயனும் கிடையாது.
கல்வி கற்றும் தன் நிலை தெளியாதாரைப் பற்றிப் பார்த்தோம். கல்வி கற்று பின் அக்கல்வி தரும் அறிவினாலேயே தடம் புரளும் மனிதர்களையும் நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா? அவர்களைப் பற்றி ரமணர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்
பற்று மதப் பேயின் பால் உய்ந்தார் – சுற்று பல
சிந்தை வாய் நோய் உய்ந்தார் சீர்தேடி ஓடல் உய்ந்தார்
உய்ந்தது ஒன்று அன்று என்று உணர்
பொருள்: பல நூல்களைக் கற்றுத் தெரிந்து, பின் தெளிந்து, அதனால் மேற்கொள்ளும் ஞான விசாரணை செய்தும் அகங்காரம் அடங்காதவர்களை விடக் கல்வி அறிவு இல்லாதவர்களே தப்பிப் பிழைத்தவர்கள் ஆவார்கள். கல்லாதவர்கள் மத அபிமானம் என்னும் பற்றாகிய பொல்லாப் பேயின் பிடியிலிருந்து மீண்டவர்கள். கற்றவர்கள் போலன்றி எதையாவது நினைத்து அதிலேயே சுழல்கின்ற மனம், வாக்கு இந்த இரண்டு நோய்களில் இருந்தும் தப்பியவர்கள். கற்ற கல்விக்கு மதிப்பைத் தேடி நாடெங்கும் அலைந்து திரியும் ஏக்கத்தில் இருந்து தப்பியவர்கள். கல்லாதவர்கள் இவ்வாறு மீண்ட கேடுகள் ஒன்றல்ல, இரண்டல்ல; எத்தனையோ வழிகளில் தப்பிப் பிழைத்தவர்கள் என்று உணர்வாயாக.
“Ignorance is bliss” என்று ஆங்கிலத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு. அதற்கு அறியாமையே நன்மை பயக்கும் என்று கொள்ளாது, அறிந்தும் அறியாதிருப்பதை விட அறியாதிருப்பதே மேல் என்றுதான் பொருள் விளங்க வேண்டும். அதேபோல் தான் ரமணரும் இங்கு சொல்கிறார். கற்றால்தான் எதிலும் உள்ள பல பரிமாணங்கள் தெரிய வரும். அப்படி கற்றபின் ஒருவனுக்குப் பணிவு வரவில்லை என்றால் அவர்கள் கல்லாதவர்களை விட கீழே போய் விட்டவர்கள் என்றுதான் அர்த்தம்.
முன்பே நாம் பார்த்தபடி கல்லார்க்கு ஒரே ஒரு குடும்பம் என்றால், கற்றவர்க்கு கற்றதன்படி நிற்கவில்லை என்றால் அவர்கள் கற்ற எல்லா நூல்களுமே குடும்பங்களாகி சம்சார சாகரத்தில் அவர்களை வீழ்த்தும். அகங்காரம் தன்னை அழித்து ஒழித்து விடாதபடி வெவ்வேறு தூல, நுண்ணிய வடிவங்களில் தலை எடுக்கும். கற்றவர்களுக்கு தனது இருப்பிடம், தன்னைச் சுற்றியுள்ளவர்கள், தனது நம்பிக்கைகள், கொள்கைகள் என்ற பலத் திரைகள் காலம், இடத்திற்கு ஏற்ப விழுந்து கொண்டு தன்னைத் தான் அறியும் முயற்சியில் பல தடைகளை உண்டாக்கும்.
தான் கற்றவன் என்ற கர்வம் வந்ததால் எண்ணம், பேச்சு என்று எதிலும் தனது தனித் தன்மையை நிலை நாட்டும் செயல்களில் ஈடுபடுவதால் வாதங்கள் புரிவதிலும், தனது பெயரையும், புகழையும், பற்றுகளையும் பெருக்கிக் கொள்வதில் காலத்தைச் செலவிடுமே தவிர, தான் பெற்ற அறிவால் தன்னைத் தெரிந்து கொள்ளும் வழியில் இருந்து தப்பிச் சென்றுவிடும். இதுதான் அடி முடி தேடிய புராணத்தில் பிரமன் சென்று தெளிந்த பாதை.
கல்லாதவர்களுக்கு மேலே சொல்லப்பட்ட கற்றவர்களைப் போன்ற வாய்ப்புகள் இல்லாததால், அவர்கள் இது போன்ற மன மயக்கம் தரும் பொல்லா வழிகளில் இருந்தும் தப்பிப் பிழைத்தவர்கள். காலத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் படும் பாட்டினால் அறிவு முதிர்ச்சி அடையும்போது, அவர்களுக்கு தான் வாழும் வாழ்க்கையின் அருமையான நோக்கம் தெரிய வரும். அப்போது அவர்கள் கற்றவர்கள் சென்ற மாறு பாதையில் செல்ல வேண்டியிராது நல்ல தெளிவு பெறுவார்கள். இதுதான் அடி முடி தேடிய புராணத்தில் விஷ்ணு சென்று தெளிந்த பாதை.
கற்றோர்களோ, கல்லாதவர்களோ எவராயினும் தன் வாழ்க்கைப் பயணத்தில் கொள்ள வேண்டிய எண்ணப்பாங்கு எப்படி இருந்தால் நன்மை பயக்கும் என்று மேலும் ரமணர் சொல்வார்.
(தொடரும் …)