[பாகம் -31] தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம் – அம்பேத்கர் [நிறைவுப் பகுதி]

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 31-ஆம் பாகம் [நிறைவுப்  பகுதி]

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

 

மறுபடியும் 1956, செப்டம்பர் 23-இல் மற்றொரு அறிக்கை மூலம் புத்தமதத்திற்குத் தாம் மாறுவதை புதுடில்லியிலிருந்து அம்பேத்கர் பிரகடனம் செய்தார். அந்த அறிக்கையில் ‘‘புத்தமதத்தில் நான் சேருவதற்கான தேதியும் இடமும் இப்போது இறுதியாக முடிவு செய்யப்பட்டுவிட்டன. நாகபுரியில் துஷ்ஷெரா நாளன்று (அசோக விஜயதசமி) அதாவது 1956 அக்டோபர் 14-ஆம் தேதி அது நடைபெறும். மதமாற்ற வைபவம் காலை 9 மணிக்கும் 11 மணிக்கும் இடையே நடைபெறும். அன்றைய தினம் மாலையில் நான் உரை நிகழ்த்துவேன்.’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இது சம்பந்தமாக நிகழ்ச்சி நிரலின் முழு விபரம் பிரபுத்த பாரத் வார இதழில் பிரசுரிக்கப்பட்டது. புத்தமதத்துக்கு மாறுபவர்கள் 19 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

1956, செப்டம்பர் 24-இல் டாக்டர் அம்பேத்கர் வணக்கத்திற்குரிய பிக்கு சந்திர மணிக்கு எழுதிய கடிதத்தில் இந்த மதமாற்ற நிகழ்ச்சியை நடத்தித் தரும்படி கேட்டுக்கொண்டார்.

அதன்படி 14-10-1956ஆம் நாளன்று காலை 9.30 மணிக்கு அம்பேக்தருக்கும் அவரது மனைவிக்கும் மகாஸ்தவீர் சந்திரமணி திரிசரணத்தையும் பஞ்சசீலத்தையும் பாலிமொழியில் பாராயணம் செய்து தீட்சை அளித்து புத்தமதத்தில் இணைத்தார். இதனைத்தொடர்ந்து அம்பேத்கர், புத்தர் சிலைக்கு மாலை அணிவித்து அதன் முன்னால் மூன்று முறை தலை வணங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் ஐந்து லட்சம் முதல் ஆறு லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.

அம்பேத்கர் புத்தமதத்தில் இணைந்த பின் இந்து மதத்தைத் துறந்து புத்தமதத்தைத் தழுவ விருப்பமுள்ளவர்கள் எழுந்து நின்று கைகளைக் கட்டிக் கொண்டு தன்னைத் தொடர்ந்து திரிசரணையும் பஞ்சசீலத்தையும் ஒப்புவிக்க வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இந்தப் பிரகடனத்தைத் தொடர்ந்து கூட்டம் முழுவதும் எழுந்து நின்றது. அம்பேத்கர் அவர்களுக்கு தீட்சை அளித்து அவர்களைப் புத்த மதத்தில் இணைத்துக்கொண்டார். இந்தச் சடங்கின் ஒரு பகுதியாக கூட்டத்தினரை 22 சூளுரைகளை எடுத்துக் கொள்ளச் செய்தார்.

அவை வருமாறு:

1. பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத் தொழுது வழிபடவும் மாட்டேன்.

2. ராமன், கிருஷ்ணனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத் தொழுது வழிபடவும் மாட்டேன்.

3. கௌரி, கணபதி மற்றும் இதர இந்து மத தெய்வங்களிடமும் பெண் தெய்வங்களிடமும் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத் தொழுது வழிபடவும் மாட்டேன்.

4. கடவுள்களின் அவதாரத் தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

5. மகான் புத்தர், விஷ்ணுவின் அவதாரம் என்று நான் நம்பவில்லை; நம்பவும் மாட்டேன்.

6. நான் ‘சிரார்த்தம்’ செய்ய மாட்டேன். ‘பிண்டதானமும்’ தரமாட்டேன்.

7. புத்தரின் சித்தாந்தங்களுக்கும் போதனைகளுக்கும் மாறான முறையில் எவ்வகையிலும் செயல்படமாட்டேன்.

8. பிராமணர்களைக் கொண்டு எந்த சமயச் சடங்குகளையும் செய்ய மாட்டேன்.

9. மனித குலத்தின் சமத்துவத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

10. சமத்துவத்தை நிலைநாட்டப் பாடுபடுவேன்.

11. புத்தர் போதித்த எண்வழி மார்க்கத்தைப் பின்பற்றுவேன்.

12. புத்தர் வகுத்துத் தந்த ‘பத்து பரமிதாக்களை’ நான் பின்பற்றுவேன்.

13. அனைத்து ஜீவராசிகளிடமும் பரிவோடும் பாசத்தோடும் நடந்து கொள்வேன். அவற்றை அன்போடு பேணி வளர்ப்பேன்.

14. நான் திருடமாட்டேன்.

15. நான் பொய் சொல்லமாட்டேன்.

16. சிற்றின்பப் பாவங்களை செய்ய மாட்டேன்.

17. மது அருந்த மாட்டேன்.

18. பிரத்னியா (விவேகம்) சீல் (சீலம்) காருண்யா (கருணை) ஆகிய மூன்று புத்தமதக் கோட்பாடுகளுக்கு இணங்க என் வாழ்க்கையை நடத்த நான் முயல்வேன்.

19. மனித குலத்தின் வாழ்வுக்கும் வளத்துக்கும் பாதகம் விளைவிக்கும், மனிதர்களைப் பாகுபடுத்திப் பார்த்து, அவர்களைக் கீழ்த்தரமாக நடத்தும் எனது பழைய இந்து மதத்தை விட்டு புத்த மதத்தை இப்பொழுது தழுவுகிறேன்.

20. புத்த தம்மன் சத்தம்மம் என்று உறுதியாக நம்புகிறேன்.

21. நான் ஒரு புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதாகக் கருதுகிறேன்.

22. புத்தரின் போதனைகளின்படி இனி நடப்பதென இப்பொழுது முதல் உறுதி மேற்கொள்கிறேன்.

இந்த சூளுரைகள் அம்பேத்கரால் மொழியப்பட்டது.

இவை பௌத்தம் மாறும் தம்மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வேண்டும் என்பதே அம்பேத்கரின் எண்ணம்.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதி பவானி சங்கர் நியோகி, பௌத்த சமிதியின் செயலாளரான வி.எம்.குல்கர்னி, ஒளரங்காபாத் மிலிந்த் கல்லூரியின் முதல்வரான திரு.எம்.பி.சிட்னிஸ், திரு.பி.எஸ்.கபீர் ஆகியோரும் புத்த மதத்துக்கு மாறினர்.

மறுநாள் அதாவது அக்டோபர் 15ஆம் நாள் அம்பேத்கர் தாம் மதம் மாறியது சம்பந்தமாக உரை நிகழ்த்தினார்.

அம்பேத்கர் பேசுகிறார்:

‘‘பலர் பின்வரும் கேள்வியை என்னிடம் கேட்டனர்- “இந்த வைபவம் நடைபெறுவதற்கு நாகபுரியை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? இந்த விழா ஏன் வேறு ஏதேனும் ஊரில் நடைபெறவில்லை?”

ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு பெரிய பட்டாளம் நாகபுரியில் இருப்பதால் அவர்களைத் திக்குமுக்காடச் செய்யவே இந்த விழா இந்நகரில் ஏற்பாடு செய்யப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். இது உண்மை அல்ல. இந்தக் காரணத்துக்காக இந்த விழா நாகபுரியில் நடைபெறவில்லை. எங்கள் பணி பிரம்மாண்டமானது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் அதற்கு மிக முக்கியமானது. எனது மூக்கைச் சொரிந்துகொண்டு சகுனம் சரியாக இல்லை என்று கூற எனக்கு நேரம் கிடையாது.

இந்த இடத்தைத் தெரிந்தெடுப்பதற்கான காரணம் வேறு. இந்தியாவில் புத்தமதத்தைப் பற்றிப் பிரசாரம் செய்தவர்கள் நாகா மக்களே என்பதை பௌத்த வரலாற்றைப் படிப்பவர்கள் தெரிந்துகொள்வார்கள். நாகர்கள் ஆரியர்களின் உக்கிரமான பகைவர்கள். ஆரியர்களுக்கும் ஆரியல்லாதவர்களுக்கும் இடையே பல உக்கிரமான போர்கள் நடைபெற்றுள்ளன. நாகர்களை ஆரியர்கள் சுட்டெரித்த நிகழ்ச்சிகளை புராணங்களில் படிக்கலாம். அகஸ்தியரால் ஒரே ஒரு நாகரை மட்டும் காப்பாற்ற முடிந்தது. அவரது வழித்தோன்றியவர்களே நாங்கள்.

மிகக் குரூரமான அடக்குமுறை, ஒடுக்குமுறையைச் சகித்துக்கொண்டு வந்த நாகா மக்களுக்கு இதிலிருந்து மீள ஒரு மாமனிதர் தேவைப்பட்டார். அந்த மாமனிதரை அவர்கள் கௌதம புத்தரில் கண்டனர். எனவே, அவர்கள் மகான் புத்தரின் போதனைகளை இந்தியா முழுவதிலும் பரப்பினர். அப்படிப்பட்ட நாகர்கள் நாங்கள். நாகா மக்களின் பிரதான உறைவிடம் நாகபுரியிலும் அதனைச் சுற்றிலுமே அமைந்திருந்தது. அதனால்தான் இந்த நகரம் நாகபுரி என்றுஅழைக்கப்படுகிறது. நாகர்களின் நகரம் என்று இதற்குப் பொருள்.

இந்த இடத்திலிருந்து சுமார் 27 மைல்தொலைவில் ஒரு குன்று இருக்கிறது. நாகார்ஜூன் குன்று என்பது அதன் பெயர். நாகா மக்கள் வாழும் பிரதேசத்தின் வழியாகப் பிரவகித்துச் செல்லும் நதி நாகா நதியாகும். இங்கு வசிக்கும் மக்கள் காரணமாகவே இந்த நதி இப்பெயரைப் பெற்றது. இந்த இடத்தை– அதாவது நாகபுரியைத் தேர்ந்தெடுத்ததற்கான பிரதான காரணம் இதுதான். இதைத் தவிர வேறு எவரையும் சினம்கொள்ளச் செய்யும் நோக்கம் ஏதும் எனக்கு அறவே இல்லை. அதுவும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சினை என் மனதில் துளிகூட இடம் பெறவில்லை. இந்த ரீதியில் எவரும் இதனை அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.

… புத்தமதத்தில் 75 சதவீத பிக்குகள் பிராமணர்கள். 25 சதவீதத்தினர் சூத்திரர்களும் ஏனையோரும். ஆனால் பகவான் புத்தர் சொன்னார்:

“ஓ பிக்குகளே நீங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். நதிகள் அவற்றின் மாகாணங்களில் பெருக்கெடுத்துச் செல்லும்போது தனியாகவே அவ்வாறு செல்கின்றன. ஆனால் அவை கடலில் கலந்து விடும்போது தமது தனித்தன்மையை இழந்து விடுகின்றன. ஆறும் கடலும் ஒன்றாகி விடுகின்றன. பௌத்த சங்கம் ஒரு மகா சமுத்திரம் போன்றது. இந்த சங்கத்தில் அனைவரும் சமத்துவமானவர்கள். நதிகள் சமுத்திரத்தில் கலந்துவிடும்போது எது கங்கையின் நீர், எது மகாநதியின் நீர் என்று இனம் காண முடியாது. இதே போன்றுதான் புத்த சங்கத்தில் சேர்ந்துவிடும்போது நாம் நமது சாதியை இழந்து விடுகின்றோம். அனைவரும் சரிசமத்துவமாகிவிடுகிறோம்.’’

இத்தகைய சமத்துவத்தை ஒரேயொரு மாமனிதர்தான் போதித்தார். அந்த மாமனிதர்தான்– மேதைதான் புத்தர்பிரான்…”

இதனைத் தொடர்ந்து அம்பேத்கர்,

‘‘….மதம் ஏழைகளுக்கு அவசியமானது. மதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவசியமானது. ஒரு மனிதன் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டுதான் வாழ்கிறான். வாழ்க்கையின் ஆணிவேர், அடிவேர் நம்பிக்கையில்தான் பொதிந்துள்ளது. இந்த நம்பிக்கை இழக்கப்படுமானால் வாழ்க்கை என்ன ஆவது? மதம் நம்பிக்கையை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு ஒரு செய்தியைக் கூறுகிறது. பயப்படாதீர்கள், வாழ்க்கை நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கும். இதனால்தான் ஏழைகளும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களும் மதத்தை அரவணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

…புத்த மதத்தின் மூல அடித்தளம் எது? புத்தரின் மதத்துக்கும் ஏனைய மதங்களுக்கும் இடையே மிகப்பெரும் வேறுபாடு உள்ளது. மற்ற மதங்கள் மனிதனை கடவுளுடன் சம்பந்தப்படுத்துவதால் அவற்றில் மாற்றங்கள் செய்வது சாத்தியமில்லை. கடவுள் இயற்கையைப் படைத்தார் என்று இதர மதங்கள் போதிக்கின்றன. கடவுள் அனைத்து வானத்தையும் காற்றையும் சந்திரனையும் சூரி னையும் மற்றும் இதர பலவற்றையும் படைத்தார். நாம் செய்வதற்கு கடவுள் எவற்றையும் விட்டுவைக்கவிலலை. எனவே நாம் கடவுளை வழிபட வேண்டும் என்று அவை கூறுகின்றன. மரணத்திற்குப் பிறகு கடவுளின் தீர்ப்பு நாள் ஒன்று உள்ளது. அனைத்தும் அந்தத் தீர்ப்பையே பொருத்துள்ளது என்று கிறித்துவ மதம் கூறுகிறது. ஆனால் புத்த மதத்தில் ஆண்டவனுக்கோ, ஆன்மாவுக்கோ இடம் ஏதும் இல்லை. உலகெங்கும் துயரம் நிலவுகிறது. 90 சதவீத மக்கள் துயரத்தில் சிக்கி அவதிப்படுகின்றனர். அல்லலுறுகின்றனர் என்று புத்தர் கூறினார். இந்த அழுத்தப்பட்ட, பரிதாபத்துக்குரிய மக்களை துயரத்திலிருந்து விடுவிப்பதே புத்த மதத்தின் தலையாய பணியாகும். புத்தர் கூறியவற்றிலிருந்து மாறுபட்ட எதையும் கார்ல் மார்க்ஸ் கூறிவிடவில்லை. புத்தர் குறுக்குமறுக்குமாகச் சுற்றி வளைத்து எதையும் சொல்லவில்லை.

….ஒரு தனிநபர் என்ற முறையில் இந்த நாட்டில் நான் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. வைசியர், சத்திரியர், பிராமணர் ஆகியோரைப் பற்றி உங்கள் மனதில் உள்ள கருத்துகள் எவ்வாறு சரிந்துவிழுந்து, அழிக்கப்படும் என்பதே இப்போதைய உண்மையான பிரச்சினை. எனவே இந்த மதத்தைப் பற்றிய விவரங்களை எல்லா அம்சங்களிலும் உங்களுக்குத் தருவது எனது கடமையும். இது சம்பந்தமாக பல நூல்களை எழுதி, உங்களது ஐயங்களையும் ஊசலாட்டங்களையும் போக்குவேன். இந்தப் பிரச்சினையில் நீங்கள் முழு அளவுக்குத் தெளிவும் விளக்கமும் பெற எல்லா உதவிகளையும் செய்வேன். குறைந்த பட்சம் தற்போதைக்கு என்மீது நம்பிக்கை வையுங்கள்.

ஆனால் அதே சமயம் உங்களது பொறுப்பும் மிகப் பெரியது. மற்றவர்கள் உங்களை மதித்துப் போற்றும் வகையில் உங்களது நடத்தை இருக்க வேண்டும். மதம் என்பது நமது கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒரு பிணம் என்று நினைக்காதீர்கள். புத்தமதத்தைப் பொருத்தவரையில் நமது இந்திய நாடு அதற்கு அந்நியமல்ல. எனவே புத்த மதத்தை மிகச்சிறந்த முறையில் பின்பற்ற நாம் உறுதி பூண வேண்டும். மஹர் மக்கள் புத்தமதத்துக்கு அவக்கேட்டைக் கொண்டுவந்து விட்டார்கள் என்ற பழிச்சொல்லுக்கு நாம் ஆளாகக்கூடாது. இது விஷயத்தில் நாம் உருக்கு உறுதியோடு இருக்க வேண்டும். இதனை நாம் சாதித்தோமானால் நம் தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம். செழித்தோங்குவோம். அதுமட்டுமல்ல உலகம் முழுவதற்குமே இந்த நற்பேறு கிட்டும். நீதி நிலைநாட்டப்பட்டா லொழிய உலகில் சமாதானம் நிலவாது.

…இப்போது இதற்கான செயல்திட்டத்தை நாம் வகுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒவ்வொருவரும் மற்றவருக்கு தீட்சை அளிக்க வேண்டும். ஒவ்வொரு பௌத்தருக்கும் தீட்சை அளிக்கும் உரிமை உண்டு என நான் பிரகடனம் செய்கிறேன்.’’

இவ்வாறு பௌத்தர்களின்– அழைப்பார்களின் இடிமுழக்கம் போன்ற கையொலிகளுக்கிடையே புரட்சியாளர் அம்பேத்கர் தனது உரையை முடித்தார்.

அம்பேத்கர் புத்தமதத்தைப் பரப்ப பல்வேறு திட்டங்களோடு இருந்தார். அதற்கான முயற்சிகளை எடுத்திருந்தார். 14-10-1956ஆம் நாள் அம்பேத்கர் புத்தமதம் மாறினார். 6-12-1956இல் அம்பேத்கர் இறந்தார். புத்தமதம் மாறி அவர் உயிரோடு இருந்தது 54 நாட்கள் மட்டுமே. அதனால் புத்தமதத்தை பெரிய அளவில் அவரால் பரப்ப முடியாமல் போனது.

1956 டிசம்பர் 7ஆம் நாள் அம்பேத்கரின் பூத உடல் எரியூட்டப்பட்டு மறைவுற்றது. அதே நாளில்தான் புத்தரின் 2500-ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி எட்டு நாள்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகள், சாஞ்சியில் முடிவுற்றன என்பது குறிப்பிடத் தக்கதோர் ஒற்றுமையான நிகழ்ச்சிகள்.

முடிவாக, புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களை இங்கு தொகுத்துப் பார்த்தால்…

பௌத்தம் கருணையை போதிக்கிறது.

பௌத்தம் சமத்துவத்தை போதிக்கிறது.

பௌத்தம் சுதந்திரத்தை போதிக்கிறது.

பௌத்தம் பாரத மண்ணில் தோன்றிய மதம்.

பௌத்தம் பாரதக் கலாசாரத்திற்கு எதிரான மதம் அல்ல.

பௌத்தம் பாரத தேசியத்திற்கு எதிரான மதம் அல்ல.

இவையே முக்கியமான காரணங்கள்.

இந்தக் காரணங்களினால் புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மதமாகத் தேர்ந்தெடுத்தார். அதுமட்டுமல்ல, பாரதத்தில் இருக்கும் அனைவருக்குமான மதமாக புத்த மதத்தை அவர் பார்த்தார். அவர் நோக்கம் நிறைவேறுமா?

(முற்றும்).

 

 முந்தைய பாகங்களின் சுருக்கம்:

பாகம் 1 முதல் 6 வரை இந்துமதத்தைச் சீர்திருத்த முயன்ற அம்பேத்கர், அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, தலித் தலைவர்களின் நிராகரிப்பையும் மீறி மதமாற்றத்தையே தீர்வாக அறிவித்ததையும், அதன் ஆன்மிகப் பயன்களாக அவர் சொன்னவைகளையும் பார்த்தோம்.

பாகம் 7 முதல் 10 வரை, தீண்டத்தகாதவர்களுக்கான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அரசியல் காரணங்கள், அதை இந்துமதத்திற்குள்ளிருந்து தீர்க்கமுடியாததென அவர் நம்புவதற்கான அவரது வாதங்கள், தகுதிவாய்ந்த தலித் ஒருவருக்கு ஒருவருட சங்கராச்சாரிய பதவிக்கான வேண்டுகோள், மதமாற்றத்திற்கு இஸ்லாமைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அவருக்கு வந்த மறைமுக அழைப்பு, நேரடி அழுத்தம் ஆகியவற்றைப் பார்த்தோம்.

பாகம் 11 முதல் 13 வரை, இந்துமதத்தின் மாற்றாக சீக்கிய மதத்தை அவர் சிந்தித்தது, கிறித்துவ நிறுவன அமைப்பை ஒதுக்கியது, மதமாற்ற வாய்ப்பை ஆக்கிரமிக்க ஐரோப்பியர்கள் செய்த உத்தி ஆகியவற்றைப் பார்த்தோம்.

பகுதி 14 முதல் 18 வரை, இஸ்லாம்– அடிமைகளை உருவாக்குவது, பெண்களை கீழ்த்தர துயரநிலையில் வைப்பது, மனநோய் பரப்புவது, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டைபோடும் பிற்போக்கானது, பகுத்தறிவுக்கு எதிரான ஷரியா சட்டம் கொண்டது, தேச பக்தி, தேசியக் கண்ணோட்டத்திற்கு எதிரானது என்பதான அவரது வாதங்களைப் பார்த்தோம்.

பகுதி 19 முதல் பாகம் 24 வரை, நடைமுறைக்கு ஒவ்வாத இஸ்லாமியத் தலைவர்கள், இஸ்லாமியர்களின் இந்துஅரசுக்குக் கீழ்ப்படியாமை குணம், இந்தியப் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள், இஸ்லாமிய மன்னர்களால் இந்தியாவில் ஏற்பட்ட சமய, கலாசாரச் சீரழிவு, வன்கொடுமைகள், கொலை, கொள்ளை ஆகியவற்றைப் பற்றிய அவரது தீவிரமான கருத்துகளைப் பார்த்தோம்.

பாகம் 25, 26-இல் இந்துவை வெறுக்க இஸ்லாமை தவறு என்று தன் வருத்தத்தையும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்துவிட்டது எவ்வளவு அவசர அவசியம் என்று தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்கிறார்.

பாகம் 27, 28, 29-இல் கம்யூனிஸத்திற்கான அவரது தீவிரமான மாற்றுக்கருத்துகளையும் பாகம் 30-இல் புத்தமதமே  ஏன் இறுதித் தீர்வானது என்றும் பார்த்தோம்.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19 || பாகம் 20 || பாகம் 21 || பாகம் 22 || பாகம் 23 || பாகம் 24 || பாகம் 25 || பாகம் 26 || பாகம் 27 || பாகம் 28 || பாகம் 29 || பாகம் 30 

6 Replies to “[பாகம் -31] தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம் – அம்பேத்கர் [நிறைவுப் பகுதி]”

 1. ம.வெங்கடேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். உங்கள் எழுத்து பணி மேன்மேலும் தொடர இறைவனை வேண்டுகிறேன். இதைவிட சிறப்பாக தெள்ள தெளிவாக அம்பேத்கரை பற்றி ஒரு நீண்ட தொடரை என் தாய் மொழியில் யாரும் இதுவரை விளக்கி கூறவில்லை. முக்கியமாக உங்கள் தொடர் கட்டுரைகளின் தலைப்பும் அதன் உள்ளே சொல்லியுள்ள தலைப்பும் மட்டும் படித்தாலே முழு கட்டுரையின் செய்தி விளங்கிவிடும். உங்களது அடுத்த தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தங்கள் பெரியாரின் மறுபக்கம் தொடர் புத்தகமாக வெளியிட்டு இருந்தால் அது எங்கு கிடைக்கும் என்ற விபரத்தை தெரிவிக்கவும்.

 2. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ம. வெங்கடேசன் எனக்குப் பிரியமான தொடரை முடித்துவிட்டார்.

  தொடர் முடிந்தது. ஆனால், இந்தத் தொடர் எழுப்பிய கேள்விகள் தொடர்கின்றன.

  புத்தம் சரணம் கச்சாமி ! தர்மம் சரணம் கச்சாமி ! பாரத மாதரம் கச்சாமி !

  ஜெய் பீம் !

  .

 3. மதிப்பிற்குரிய ம.வேங்கடேசன் அவர்கள் எழுதிய இப்பெருங்கட்டுரை பல விடயங்கள் சார்ந்த எழுச்சியை உண்டாக்கியது..

  களிமிகு கணபதி அவர்கள் சொல்வது போல நிறைய வினாக்கள் இன்னும் எங்கள் முன் நிலையில் இருக்pன்றன… அம்பேத்கரால் மதம் மாறியவர்கள் தொடர்ந்து எத்தனை மாதம் அந்த மதத்தில் இருந்தார்கள்? என்பது கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி..

  ஏன் அவர்கள் திரும்பி பழைய மதத்திற்கே மாறினார்கள் என்பது குறித்த ஆய்வையும் அது சார் கட்டுரையையும் கட்டுரையாசிரியர் அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்..

 4. வணக்கம் ஐயா, அருமையான நிகழ்வுகளுடன் பிரியாவிடை கொடுத்துவிட்டீர்கள் இத்தொடருக்கு. பல சர்ச்சைகளுக்கிடையில் உண்மைத்தெளிவுகளை சிந்தாமல் சிதராமல் உள்ளத்தெளிவுகளாக 31பாகங்களாக அமைத்துக்கொடுத்ததற்கு மிக்க நன்றிகளும் பாராட்டுகளும். தங்களது அடுத்த கட்டுரைக்காக காத்திருக்கிறேன்.

 5. அன்புள்ள வெங்கடேசன்,

  அற்புதமான பணியை செய்திருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

  புத்த மதம் நமது பண்பாட்டின் வேர்களுள் ஒன்று. அதற்கு மாறிய அம்பேத்கரின் கருத்துக்களை தெளிவாக தொகுத்திருக்கிறீர்கள். எனினும், அவர் மதம் மாறக் காரணமான தீண்டாமையும் சமூக சமத்துவமின்மையும் இன்னும் நமது மதத்தில் இருப்பது வெட்கக்கேடு. அம்பேத்கர் அளித்த அதிர்ச்சி வைத்தியம் இன்னும் போதவில்லை என்றே தோன்றுகிறது.

  உண்மையில், நமது மதம், நாடு மீது அபிமானம் கொண்டவர்கள் அம்பேத்கரின் கருத்துக்களால் மனம் மாறுவார்கள். அவர்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பவர்கள் அல்ல. ஆனால், பிறர் முதுகில் சவாரி செய்யும் ஆதிக்ககுணம் படைத்த சிலர் மதத்தை கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். நமது நாட்டில் உள்ள பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் கட்சிகளாக அறியப்படுபவை அனைத்துமே சுயநல நோக்கத்துக்காக அம்பேத்கர் பெயரை மட்டும் அவ்வப்போது ஊறுகாய் போலத் தொட்டுக் கொள்கின்றன.
  அவர்களே தான் ஹிந்து மதத்தின் சமத்துவமின்மை குறித்து முழங்குபவர்களாகவும் இருக்கிறார்கள் (உதாரணம்: திமுக, பாமக).

  இதற்கு ஒரே தீர்வு- தாழ்த்தப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, சமூகத்தின் கடைக்கோடியில் வாழும் பரம் ஏழைகளான தலித் சகோதரர்களின் வீடுகளுக்கு உள்ளார்ந்த அன்புடன் நாம் செல்ல வேண்டும் என்பதே. அவர்களையும் சக மானுடராகக் கருதும் நிலையை, கோவில்களில் சமமான வழிபாட்டு உரிமையை அவர்களே பெறும் நிலையை உருவாக்காத வரை, ஹிந்து மதம் என்று இப்போது சுட்டிக்காட்டப்படும் சனாதன தர்மத்துக்கு விடிவு இல்லை.

  வெறும் வாய்ச்சொற்களால் பிரயோஜனம் இல்லை. நாம் எந்த ஜாதியைச் சார்ந்திருந்தாலும், வாரம் ஒருமுறையேனும் தலித் குடியிருப்புகளுக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடுவோம். அவர்களை மேலே தூக்கி விடாதவரை, நமது முன்னோர் அவர்களை நசுக்கிய பாவத்துக்கான தண்டனைகளை நாம் பெற்றே ஆக வேண்டும்.

  வெங்கடேசனின் தொடர் எழுப்பிய மன எழுச்சியில் எழும் கருத்துக்கள் இவை. வெறுமனே பிற அயல் மதங்களுடன் வாதிட்டுக் கொண்டிருப்பதில் எப்பயனும் இல்லை. இனியாவது தெளிவோம்.

  -சேக்கிழான்

 6. Dear Editor and Mr. Venkatesan,

  Thanks for the wonderful articles, this series is one another feather on your hat.

  One another book content is available with Tamil Hindu, hope this book will released soon.

  I request you to mention the book shop in every district where Tamil Hindu Books are available? I believe these are not available in famous bookshop because they are in the grip of sudo secularists.

  Regards

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *