[பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்

சுவாமி சித்பவானந்தர் குறித்த “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் முந்தைய பகுதிகள்:

(தொடர்ச்சி…)

சித்பவானந்தரின் சிந்தனைகள் – மேலாம் வாழ்வு 

வாழ்வின் உயர்ந்த நிலை சந்நியாசமாகிறது. எண்ணத்தாலும் சொல்லாலும், செயலாலும் பற்றற்ற நிலை சந்நியாசமாகிறது. வேண்டுதல் வேண்டாமையிலான் இறைவன். எண்ணம் அவனைப் பற்றியிருக்கும் அளவு அது பற்றற்ற எண்ணமாகின்றது. சொல் அவனுடைய பெருமையை எடுத்துப் புகட்டுகிற பாங்கில் அமையும்பொழுது அது தூய சொல்லாகிறது. செயல் அவனுக்காகவென்று செய்யப்படுகின்றபொழுது அது பற்றற்ற செயலாகின்றது. இனி, இறைவன் எங்கு இருக்கின்றார் என்ற கேள்வி எழுகின்றது. அதற்கு விடை எங்கும் இருக்கின்றார் என்பதேயாகும். உயிர்கள் யாவும் இறைவனுடைய சொரூபங்களே. உயிர்களிடத்து இறைவனைக் காண்பது இறைவனை எங்கும் காண்பதற்கு நிகராகும். இனி, உயிர்களிடம் இறைவனைக் காண்பது எங்ஙனம் என்னும் கேள்வி எழுகின்றது. உயிர்களை இறைவன் சொரூபங்களாகப் பாவித்து அவ்வுயிர்களுக்குப் பணிவிடை புரிவதே உயிர்களிடம் இறைவனைக் காண்பதற்கு உற்ற உபாயமாம். நாம் காணும் உயிர்வகைகளுள் மனிதனே சிறப்புடையவனாகின்றான். எனவே மனித வடிவிலிருக்கும் உயிர்களுக்குப் பணிவிடை புரிவது இறைவனுக்குகந்த பணிவிடையாகிறது. மேலாம் வாழ்க்கை வாழ விரும்புகிறவர் மேலாம் லட்சியம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். இலட்சியங்களுளெல்லாம் தலைசிறந்தது எல்லையற்ற பொருளில் தன்னைலயமாக்குவதேயாகும். எல்லையற்ற பொருளை எல்லைக்குட்பட்ட இந்திரியங்களைக் கொண்டு நாம் தேடி வருகிறோம். எல்லைக்குட்பட்ட இந்திரியங்களைக் கொண்டு உயிர்களைக் காணும்பொழுது அவைகள் ஜீவசொரூபங்களாகத் தென்படுகின்றன. இந்திரியங்களை அதீத நிலைக்கு எடுத்துச் செல்லுகிறபொழுது அங்கு நாம் காண்கின்ற காட்சி வேறு. இந்திரியங்கள் எல்லைக்குட்பட்டிருக்கிறபொழுது ஜீவசொரூபங்களாகத் தோன்றிய உயிர்களே அதீத நிலையில் சிவசொரூபங்களாகக் காட்சி கொடுக்கின்றன. உயிர்களை ஜீவ சொரூபங்களாகக் காணும் காட்சியை நம்மிடத்திருந்து அகற்றிவிட்டு சிவ சொரூபங்களாகக் காணும் காட்சியைப் பெறுவதே நம் வாழ்வின் லட்சியமாகும். சந்நியாசி என்பவன் இந்த ஒரு லட்சியத்தைத் தவிர வேறு எதையும் அவன் கருத்தில் வாங்குவதில்லை. இதை அனுபூதி வாயிலாகப் பெறுவதற்கே சந்நியாசி தன் வாழ்வை ஒப்படைக்கின்றான்.

தீரன் ஒருவனே இந்த லட்சியத்தை அடைய முடியும். யாண்டும் நான் ஆத்ம சொரூபம், நான் காண்கின்ற உயிர்கள் யாவும் ஆத்ம சொரூபம் என்று ஆழ்ந்து எண்ணுபவன் தீரன் ஆகின்றான். இந்திரியங்கள் அவனை மயக்குவது கிடையாது. தன்னையும் தான் காண்கின்ற பொருள்கள் அனைத்தையும் ஆத்ம சொரூபமாகக் காண்பவனிடம் காமகாஞ்சனம் எங்ஙனம் குடிகொண்டிருக்க முடியும்! இத்தகையவன் தன்னைப் பிரம்மத்தோடு ஐக்கியப்படுத்தியவன் ஆகிறான். சாயுஜ்யநிலை அவனுக்கே சொந்தமாகிறது. இவ்வுலகப்பொருள்களிடமிருந்து முற்றிலும் விடுபட்டு நிஜசொரூபத்தில் நிலைத்திருக்கும் சுதந்திர புருஷன் அவன் ஆகிறான்.

மனம் சஞ்சலமுடையது. ஒன்றை விட்டு மற்றொன்றைப் பற்றிக் கொண்டிருப்பதுதான் அதன் இயல்பு. மனதை அலைந்துதிரிய விடுபவர்கள் ஆத்ம இன்பத்தை அடைய முடியாது. சரீரசுகத்தைத்தான் அவர்கள் பெறமுடியும். சரீர சுகத்திலேயே உழன்று கொண்டிருப்பவர்கள் உலக இன்பத்தைத்தான் நாடுவார்கள். மற்றவர்களுக்கும் உலக இன்பத்தைத்தான் அவர்கள் நல்க முடியும். மனதை அடக்கிப் பாரமார்த்திக வாழ்வு வாழ்பவர்கள் மேலோர் ஆகின்றனர். அவர்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் பாரமார்த்திக இன்பம் ஒன்றையே இறைவனிடம் பிரார்த்திக்கின்றனர்.

மேலாம் வாழ்வு வாழ்பவர்களுக்கிடையில் இருபிரிவினர் உண்டு. தங்களையும் மற்றவர்களையும் பெருவாழ்வுக்கு எடுத்துச்செல்பவர்கள் ஒரு கூட்டத்தினர் ஆகின்றனர். இவர்கள் அவதார புருஷர்களென அழைக்கப்படுகிறார்கள். தங்களை மட்டும் பெருவாழ்வுக்குத் தகுதியுடையவர்களாகச் செய்து கொள்பவர்கள் மற்றொரு கூட்டத்தினர் ஆகின்றனர். இவர்கள் ஜீவன் முக்தர்களென அழைக்கப்படுகின்றனர். அவதார புருஷர்கள் அவனியில் தோன்றுவதற்கும், ஜீவன் முக்தர்கள் தோன்றுவதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அவதார புருஷர்கள் கர்மபந்தத்திற்குட்பட்டுப் பிறப்பதில்லை. ஜீவன் முக்தர்கள் தங்கள் கர்மபலனைத் தீர்த்துக்கொள்வதற்காகப் பிறப்பெடுகின்றனர். ஜீவன் முக்தர்களை ஆற்றில் மிதந்து செல்லும் ஒரு மரக்கட்டைக்கு ஒப்பிட்டால், அவதார புருஷர்களை ஒரு பெரிய கப்பலுக்கு ஒப்பிடலாம். மரக்கட்டை ஒருவர் மட்டும் ஆற்றைக் கடந்து செல்லுவதற்குப் பயன்படும். பெரிய கப்பலோ ஏராளமான மக்களைக் கரையேற்றுதற்குப் பயன்படுகின்றது. ஜீவன் முக்தர்கள் மரக்கட்டை போன்று தாங்கள் மட்டும் முக்தியடைய முயலுகின்றனர். அவதார புருஷர்கள் பெரிய கப்பல் போன்று மற்றவர்களையும் பவசாகரத்தினின்றும் கரையேற்றுகின்றனர்.

அவதார புருஷர்களிடம் வசிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துவிட்டால் நம் வினை சீக்கிரம் அறுபட்டுப் போகிறது. நமக்கு விரைவில் விடுதலைப் பேறு கிட்டுகிறது. நாம் இறைவனுடைய குழந்தைகள். இறைவனுக்குப் பணிவிடை புரிவதற்காக இவ்வுலகிற்கு நாம் வந்ருக்கிறோம். இங்ஙனம் நாம் அடிக்கடி எண்ணி வரவேண்டும். இவ்வெண்ணமானது நம்மிடமுள்ள சிறுமைகளை எல்லாம் அகற்றி விடுகின்றது. பிறரையும் இவ்வெண்ணத்தில் இருக்கும்படி நாம் தூண்டி வந்தால் அவர்களிடத்திலுள்ள சிறுமைகளும் அகலுகின்றன. அப்பொழுது அவர்கள் தங்களை இறைவனுடைய குழந்தைகளாகவும், இறைவனுக்குப் பணிவிடை புரியத் தாங்கள் இவ்வுலகில் தோன்றியிருப்பதாகவும் தங்களைப்பற்றிக் கருதுவார்கள்.

தன்னைத் திருத்துபவனே உலகைத் திருத்துபவன் ஆகிறான். இடையறாத முயற்சியே ஒருவனை உயர்ந்தோன் ஆக்குகின்றது. வினையாற்றுதலில் தீவிரமாக ஈடுபடுதல் வேண்டும். சோம்பலுக்குச் சிறிதும் இடங்கொடுக்கக் கூடாது. சோம்பல் தமோ குணத்தை வளர்க்கிறது. தமோ குணம் கவனக்குறைவையும், சிரத்தையின்மையையும் வளர்க்கிறது. இது பெரு வாழ்விற்குப் பேரிடைஞ்சலாகும். தமோ குணத்தை விரட்டியோட்ட வினையாற்றுதலே சிறந்த வழியாம்.

சச்சிதானந்தம் பிறப்புரிமை என்பதை ஒவ்வொருவரும் அறியவேண்டும். செயலனைத்தையும் கடவுளிடம் ஒப்படைக்கிறவர்கள், தங்களுடைய பிறப்புரிமையைப் பெறத் தகுதியுடையவர்களாகிறார்கள். தனக்காகச் செய்யும் காரியத்தையும் தன்னிடமுள்ள இறைவனுக்காகச் செய்கிறோமென்ற பாவனையில் செய்து வந்தால் அது நம்மை விரைவில் இறைவனிடம் எடுத்துச் செல்லுகின்றது. இங்ஙனம் தனக்காகவும், பிறருக்காகவும் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைக்கத் தெரிந்தவனே சிறந்த வாழ்வு வாழ்பவன் ஆகின்றான்.

 

உண்மை காணல்

இறைவன் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளுள் மேலானவை நன்மை, தீமை கண்டறியும் அறிவும் ஆற்றலுமே என்க. அவற்றைத் தீய வழியில் பயன்படுத்தாதவன் நிறைவோடு வாழ்கின்றான். மலையிற் பொழியும் மழை மலைபடுபொருள்கள் அனைத்தையும் அடித்துக்கொண்டு போகுமாப் போலே, பலரும் தம் மனம்போன போக்கில் வெளியிடும் கருத்துகள், நன்மை, தீமை பகுத்துக் காணும் தனிமனிதனின் மெய்யுணர்வை இருக்கும் இடம் தெரியாமல் ஒதுக்கி விடுகின்றன. எனவே எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருள் காணுவதில் எவரும் பிற்படலாகாது.

நமக்குக் கிடைக்கும் கருத்து எதுவாயினும் அதன் உண்மையை உள்ளவாறு தெளிதல் வேண்டும். பொய்யை மெய்யாக எண்ணி மயங்கும் மயக்க உணர்விற்கு இடம் தருதலாகாது. நம்முடைய குறைக்கு நாமே பொறுப்பானவர்கள் என்ற விழிப்புணர்வோடு இருத்தல் வேண்டும். அப்போதுதான் உள்ளவாறு ஒன்றை உணர்தல் கூடும்.

ஒரு செயலைக் கண்டு ஒருவரது அறிவின் எல்லையை அளந்துவிட முடியாது. எதிர்பாராத நிகழ்ச்சிகளாக எத்தனையோ நன்மை தீமைகள் ஒருவருடைய செயலில் இடம் பெறுதல் கண்கூடு. நம்முடைய கோட்பாட்டினின்று மாறுபட்டுள்ளது என்ற ஒரே காரணம் பற்றி, பிறர் கோட்பாடுகளை ஒதுக்குதல், புறக்கணித்தல் பொருந்தாது. இருவர் கோட்பாடுகளுமே தவறு உடையதாகவும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். உண்மை காணும் உயர் மனமே இவண் துணை நிற்கும்.

நாம் ஒருவன் பெற்றுள்ள பட்டம், பதவிகளைக் கொண்டு அவனை உயர்வானவன் என்றும், பட்டம் பதவிகள் இல்லாதவன் என்ற காரணத்தால் பிறன் ஒருவனைத் தாழ்வானவன் என்றும் கருதுவோமானால் பெருங்குறையுடையவர்களாவோம். அவ்வாறு மதிப்பிடுதல் ஒட்டகம் ஒன்றை அதன் மேலுள்ள சேணங்களைக் கொண்டு மதிப்பிடுதல் போன்றதாகும். அவரவர் தகுதி பற்றி மதிப்பதே சாலச் சிறந்ததாம். நமக்குப் பகையானவன் என்ற காரணம் பற்றி ஒருவனைக் கொன்று பழி தீர்த்துக் கொள்வது சரியன்று. இயன்ற வரையில் முயன்று, அவனை நல்வழிப்படுத்துவதே முறை, அவ்வாறு செய்யாவிடில் அவனை நல்வழிப்படுத்தி, உயர்த்தும் வாய்ப்பை நாம் இழந்துவிடுகிறோம். எனவே பழிக்குப் பழி வாங்கும் ஒறுத்தல் மனப்பான்மை கொடியதொன்றாம்.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை [குறள்]

தாய் செய்த குற்றத்திற்காகவும், தன் மனைவி செய்த குற்றத்திற்காகவும் ஒருவன் பழிக்குரியவனாதல் பொருந்துமோ? தனிமனிதன் தன் குற்றத்திற்கு மட்டுமே பொறுப்புடையவனாவன். பிறர் குறை பற்றி, தனக்கு வரும் பழிச்சொல் குறித்துக் கலங்குதல் வேண்டாதது. தன்னளவிலேனும் தூயவனாக ஒருவன் வாழ்வது சிறப்புடையதாகும். நம் உடைமை என்பதற்காகவோ, பிறர் உடைமை என்பதற்காகவோ ஒரு பொருளின் மதிப்பைக் கூட்டியோ, குறைத்தோ மதிப்பிடுவது நடுவு நிலைக்கு மாறுபட்டதாகும். உண்மை காணுமிடத்து அறிவுடையோன் ஒருவனது உடைமையே மேலான் மதிப்பு, பெறுமானம் உடையதாகின்றது.

தன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள், ஆணைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்ற காரணம் பற்றி எவரையும் தாழ்வுபடுத்துதல் அடாதது. தன்னையே தெய்வமெனக்கொண்டு கற்பு நெறி வழுவாது அன்பு செய்து வாழும் தன் மனைவியைத் தன்பாற்பட்டவள் என்ற காரணம்பற்றி ஒருவன் தாழ்வாக எண்ணுவானாயின் அவனினும் குறைபாடுடையவன் எவன்? நண்பனொருவனது துயரத்தை அளந்தறிய அவன் வடிக்கும் கண்ணீர் துணை செய்யாது. உண்மையான துயரம் கண்ணீர்ப் பெருக்கிற்கு அப்பாற்பட்டதாக அடங்கி விடுகின்றது. ஆரவாரத்துடனும் பெருமுழக்கத்துடனும் செய்யப்பட்டது என்ற காரணம் பற்றி ஒரு செயலைப் பற்றி அதிக உயர்வாக எண்ணிவிடக் கூடாது. எண்ணற்ற பெரியோர்கள் தாம் செய்தோம் என்ற உணர்வு இன்றியே செயற்கரிய பல நற்செயல்களைச் செய்து முடித்துத் தாம் இருக்கும் இடமும் கூடத் தெரிமல் அமைதியாக வாழ்கின்றனர்.

தன்னைப் பிறர் புகழ்ந்து பேசக்கேட்டே பழகியவன் தன்னை மறந்த திகைப்பில், வியப்பில் ஆழ்ந்து போகிறான். புகழ் போதை அவனை ஆட்கொண்டு விடுகிறது. ஆனால் புகழ், விருப்பை, வென்று கடமை செய்பவர்கள், தூய, எளிய வாழ்வு வாழ்பவர்கள் எளிமையில் இன்பம் கண்டு மனநிறைவு பெறுகின்றனர். பிறர் நற்செயல்களைக் கண்டு, பொறாமை கொண்டு அந்த நற்செயல்கட்கும் தீய காரணங்களைக் கற்பித்து அவற்றின் மதிப்பைக் குறைக்க முற்படுவது அடாதது. உலகில் சிலர் அத்தகைய இழிசெயலில் இன்பம் காண்கின்றனர். தூய உள்ளத்தை, தூய பணியின் சிறப்பை உள்ளவாறு உணர்ந்து போற்றுதல் பெரும்பாலோர்க்கு அரிய செயலாகலாம். ஆனால் உலகம் பொறாமையுணர்வைக் கண்டுகொள்ளாது விடாது.

குறைகள் நிறைந்த ஒருவன், நிறையுடையவன் போல தன்னைக் காட்டிக் கொண்டு வாழ முற்படுவது மிகவும் இடர்ப்பாடானதும், அறியாமைக்கு இடமானதும் ஆகும். ஆனால் உள்ளபடி நேர்மையாக வாழ்வது என்பது இன்பம் தரும் எளிய செயலாகும்.

பிறருக்குத் தீங்கு இழைக்க முற்படுவதினும், தன்னை எதிர்நோக்கி வரும் நன்மைகளை விரைந்து ஏற்றுக்கொள்ளுதல் எவ்வளவோ நன்மையுடையதாகும். அந்த நல்லியல்பே நமக்கு எல்லா நன்மைகளையும் கொடுத்துத் தீமைகளை அகற்றும்.

எப்போதும் எதனையும் பாராட்டிப் பேசுதல் நல்லது; குறைகண்டு, அல்லது பொறாமைபற்றிக் கற்பித்துக் கூறுதல் அடாதது. பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு என்பது வள்ளுவர் வாய்மொழி. பிறர் நன்மையைப் பேசுமளவிற்கு நாமும் போற்றப்படுகிறோம். பகைவரும் நம்பால் அன்பு செய்கின்றனர். நம் குறைகளும் கூட அவர் கண்களுக்குப் புலனாவதில்லை. கொன்றன்ன இன்னாசெயினும் அவர் செய்த ஒன்று நன்றுள்ளக் கெடும் என்ற குறள்மொழியை உன்னுமிடத்து நன்றுள்ளலின் சிறப்பு, பயன் புலனாகின்றதன்றோ! பிறருடைய பெருமைகளைப் பாராட்டி, குறைகளை மறைத்தல் சீரிய இயல்பாகின்றது.

வாழ்க்கையின் உண்மையை உள்ளவாறு தெளிந்தவன் அனைத்தையும் அருட்காட்சியாகக் காண்கிறான். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்பது அவனது புனிதக் கோட்பாடாக அமைகின்றது. பொருளல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருள் அவனைவிட்டு அகல்கின்றது. எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருளின் மெய்த்தன்மை காணும் மெய்யுணர்வு அவன்பால் முகிழ்க்கின்றது.

(தொடரும்…)

 

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார்.

www.rktapovanam.org மற்றும் rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், அன்புக் குரல், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.

One Reply to “[பாகம் 20] மேலாம் வாழ்வு, உண்மை காணல்”

  1. நல்ல மொழிகள். உண்மையான வரிகள்.

    சிவநேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *