ஸ்ரீ ரமண மகரிஷியிடம் குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு கேட்டதன் பலனாக மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு தந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய தொடர்…
முந்தைய பகுதிகள் – பகுதி 1 | பகுதி 2| பகுதி 3| பகுதி 4 | பகுதி 5| பகுதி 6| பகுதி 7| பகுதி 8| பகுதி 9
ஆன்ம ஞானிக்குக் கர்மங்கள் யாவும் நசிக்கப்பட்ட நிலையில், உடலிருந்தும் அதன் மேல் அவருக்கு அபிமானம் ஏதும் இல்லாததால் அதைச் சுற்றி நடக்கும் எதையும் ஒரு சாட்சி போலவோ, சொப்பனத்தில் நடப்பது போலவோ பார்த்துக் கொண்டிருப்பார். தன்னிலை பெயராது அவர் எப்போதும் இருப்பதால் அவரது மெய்நிலைக்கு எந்த விதமான சலனமும் இல்லை.
यस्य सर्वे समारम्भा: कामसङ्कल्पवर्जिता: |
ज्ञानाग्निदग्धकर्माणं तमाहु: पण्डितं बुधा: ||
எவன் இயக்கம் எல்லாமும் இச்சை எண்ணம் என்னும்
இவை இல்லனவா இயங்கும் – அவனே
அறிவெரியால் வெந்த வினையான் அவனை ஆன்றோர்
அறிவொளி சேர் பண்டிதன் என்றார்
பொருள்: எவனுடைய செயல்கள் எல்லாமும் ஆசை, சங்கல்பம் என்பவை இல்லாமல் செயல்படுமோ, அந்த சங்கல்பம் அற்றவனே ஞானாக்கினியால் சகல கர்மங்களும் எரிக்கப்பட்டு அனைத்து வினைகளும் தீர்த்தவன் ஆவான். அந்த வினை ஒழிந்தவனை நன்கு கற்றறிந்த ஆன்றோர் ஞான ஒளி பெற்ற ஞான பண்டிதன் என்பார்கள்.
சாதகன் ஒருவனுக்கு எவரை அடைந்தால் தனக்கு ஞானம் பெரும் வழிகள் தெரியவரும், அவரை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்ற ஐயம் வரலாம் அல்லவா? அவர் எப்படி இருப்பார், என்னென்ன செய்வார் என்று அவன் தெரிந்து கொள்வதற்காக, அவரது குணாதிசயங்களை கிருஷ்ண பகவான் இங்கு விவரிக்கிறார்.
எப்படி உள்ளதை உணர்ந்த ஆன்ம ஞானியான ஜீவன் முக்தருக்கு உடல் இருக்கும் ஆனால் அதன் மேல் அபிமானம் இருக்காதோ, அதே போன்று அவருக்கு செயல் இருக்கும் ஆனால் அதன் பின் நம் போன்றோருக்கு உள்ளது போன்ற சங்கல்பமோ, செய்யவேண்டும் என்ற உந்துதலோ இருக்காது. முன்பு நாம் பார்த்தது போல ஞான அக்கினி அவனது எல்லா கர்மங்களையும் பொசிக்கிவிட்டது. எப்போது அனைத்து கர்மங்களும் ஒருவனுக்கு ஒழிக்கப்பட்டு விட்டதோ அப்போதே அவனுக்கு அவைகளுக்கு வேண்டிய உந்துதல்கள் அனைத்தும் போய்விடுகிறது. அதனால் அவன் இவ்வுலகில் ஏதாவது செய்யவேண்டும் என்றும் கிடையாது; அதேபோல செய்யக்கூடாது என்றும் கிடையாது. எப்படி காலையில் சூரியன் உதித்தவுடன் தாமரை மலருமோ, அதன் சூட்டினால் நீர் வற்றுமோ, உலகில் உள்ளோர் அவரவர் காரியங்களில் ஈடுபடுவார்களோ, அது போன்றே ஞானியின் செயலும் அவரது முன்னிலையில் இயற்கையாக நடைபெறும். தாமரை மலர வேண்டும் என்றோ, நீர் வற்ற வேண்டும் என்றோ, சகல ஜீவர்களும் காரியங்களில் ஈடுபட வேண்டும் என்றோ சூரியன் உதிப்பதில்லை. மேலும் மலரும் தாமரையினாலோ, வற்றிய நீரினாலோ, மக்களின் செயல்களினாலோ எப்படி சூரியன் பாதிக்கப்படுவதில்லையோ, அதே போன்று ஞானியின் செயல்களும் அவரை ஒட்டாது.
ஞானியின் செயல்களுக்குக் காரணம் என்று ஏதும் அவரைப் பொறுத்தவரை இல்லாததால், அதைப் பற்றிய எண்ணமோ, செய்கையின் பலனிலும் ஆசையோ அவருக்கு இல்லை. அதனால் அதைப் பற்றிய சிந்தையும் இருக்காது. அந்த நிலையில் அவரது எந்த செய்கையும் மிக நேர்த்தியாக அமையும். அப்படி அமைந்தாலும், அவரது கர்மங்கள் முழுதும் வெந்து விட்ட நிலையில் அவர் எந்தச் செயலும் செய்யாதவரே . அப்படி ஆன்ம ஞான ஒளி பெற்ற அவரையே ஞான பண்டிதர் என்கிறார்கள்.
कामक्रोधवियुक्तानां यतीनां यत्वेतसां |
अभितो ब्रह्मनिर्वाणं वर्तते विदितात्मनाम् ||
ஆசை சினம் அற்றார் அடங்கு மனம் உற்றார்
தேசுறூம் ஆன்மாவைத் தேர் எதிகள் – பாசமில்
புத்தர் அவருக்குப் பூரண நிர்வாண சுகம்
நித்தம் அனுபூதமாம் நேர்
பொருள்: (எதையோ அடையவேண்டும் என்ற) ஆசையும், (அதை அடையாததால் வரும்) கோபமும் நீங்கப் பெற்றவராய், எண்ணங்கள் எழாது அடங்கிய மனம் உடையவராய், தேஜசுடன் கூடிய ஞான ஒளியான ஆன்மாவை தேர்ந்து, உணர்ந்த சந்நியாசிகளான பற்றற்ற ஞானிகளான அவர்களுக்கு பரிபூரணமான பிரம்மானந்த சுகமானது என்றும் அபரோட்ச அனுபவமாகும்.
ஆசை என்பதும் கோபம் என்பதும் இருதரப்பட்டது அல்லாமல், அவ்விரண்டுமே ஒன்றுக்கு ஒன்று பிணைந்து வருவது. நாம் ஒன்று கிடைக்க வேண்டும் அல்லது சேர வேண்டும் என்று நினைப்பதும் ஆசையே; ஒன்று கிடைக்க வேண்டாம் என்பதும் ஆசையே. அப்படி அது இருதரப்பட்டது போலவே, சேரவேண்டியது சேராவிட்டாலும், சேர வேண்டாதது சேர்ந்து விட்டாலும் வருவது கோபமே. இவை எல்லாமே சங்கல்பமோ, உந்துதலோ இல்லாமல் வராது. எங்கு சங்கல்பம் இல்லையோ, அங்கு ஆசை, கோபம் எதுவுமே கிடையாது. எங்கு வேண்டும், வேண்டாமை இல்லையோ அங்கு எண்ணங்கள் ஏதும் எழுவதற்கும் வாய்ப்பு இல்லை. எண்ணங்கள் என்பது சலனமற்ற மனமாகிய நீர்பரப்பில் தோன்றும் குமிழிகள் போல இருப்பதால், அவை எழாத இடத்தில் மனமும் அடங்கியே இருக்கும். சாதகனைப் பொறுத்தவரை அவனது ஒவ்வொரு எண்ணமும் அடங்க அடங்க அவனுக்கும் மன அமைதி கிடைக்கும். அது அவனது பயிற்சியால் வருவது.
எண்ணங்களே மனம் என்னும்போது, எண்ணங்கள் இல்லாத போது மனம் எப்படி இருக்கும்? சாதகன் மனத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம். ஆனால் ஞானிக்கோ மனம் என்பது ஒழிந்தே போயிருக்கும். மனம் முற்றும் அழிந்த ஞானிகள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்றாலும், அவர்கள் அறிவொளி மிகுந்த ஞானப் பாதையைத் தேர்ந்தெடுத்து தான்-பிறர் என்னாமல் எங்கும் எவருள்ளும் உறையும் ஆன்மாவையே பற்றிக்கொண்டு அனவரதமும் இருப்பதால், அங்கு இங்கு என்னாது எங்கும் இலங்கும் அமைதியை அன்றி வேறு எதுவும் அவர்கள் அறியாதவர்கள். அந்த நிலையே அவர்களது இருப்பாய் அமைவதால் அதுவன்றி வேறு எதுவும் அவர்களது அனுபவத்தில் கிடையாது. அதை அவர்கள் மொழியாலோ, சொல்லாலோ, சைகையாலோ எந்த விதத்திலும் வெளிப்படுத்துவது கிடையாது. அவர்களைப் பார்க்கும் மற்றோருக்கு அது தானே தெரியவரும். அவர்களது சந்நிதியைச் சென்றடைந்த மாத்திரத்திலேயே பலருக்கும் அந்த அமைதி அவரவர்க்குள்ளும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களுக்குத்தான் அவர் ஞானி. ஞானிக்கோ எல்லோரும் அன்றி எல்லாமே ஆன்மாதான்.
शनै: शनैरूपरमेद्बुद्धया धृतिगृहीतया |
आत्मसंस्थं मन: कृत्वा न किञ्चिदपि चिन्तयेत् ||
தீரஞ்சேர் புத்தியினால் சித்தத்தை மெல்லமெல்ல
நேரச் செயவேண்டும் நிச்சலன – மாரதனே
சித்தத்தை ஆன்மாவில் சேர்த்திடுக மற்றெதுவும்
இத்தனையும் எண்ணிடாதே
பொருள்: மாவீரனாகிய அருச்சுனா! தைரியத்தோடு கூடிய விவேகமுள்ள புத்தியினால் மனதை, அதன் இயல்பாகிய சலனத்தில் இருந்து சிறிது சிறிதாக, எல்லா எண்ணங்களில் இருந்தும் விடுபடச் செய்து, நேர் வழியில் சேர்க்க வேண்டும். சலனமற்ற அந்த மனதை ஆன்மாவிற் சேர்த்து ஸ்திரமாக்க வேண்டும். வேறெந்த சிந்தனையையும் துளிக்கூட எண்ண வேண்டாம்.
போர் புரிவதற்கு தைரியம் இருந்தால் போதும். ஆனால் விஷய வாசனையுள்ள மனத்துடன் போர் புரிவதற்கு தைரியத்துடன் விவேகமும் வேண்டும். “எண்ணங்களே மனம், யாவினும் நான் எனும் எண்ணமே மூலம்” என்பதால், மனத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்ள “நான் யார்” எனும் விசாரணையைத் தொடங்க வேண்டும். மனத்தின்கண் விஷய வாசனைகள் இருக்கும்வரை இந்த விசாரணை தொடர வேண்டும்.
மனமோ இந்திரியாதி கருவிகள் மூலம் கிரகித்த விஷயங்களைப் பற்றிக்கொண்டு சதா சர்வ காலமும் வெளிமுகமாக ஓடிக்கொண்டே இருக்கும். அதிலும் அதற்கு ஒரு நிரந்தரத் தன்மை கிடையாது. ஒன்று இல்லையானால் வேறொன்றைப் பிடித்துக்கொண்டு குரங்கு போல் தாவிக் கொண்டிருக்கும். அதை தன் வசத்துள் கொண்டுவந்து, மனத்தை ஒருமுகப்படுத்தி, அதையும் வெளிமுகமாக விடாது உண்முகமாகத் திருப்பி தனது உண்மையை விசாரிக்க வைப்பது என்பது ஆரம்பத்தில் முடவன் அடைய விரும்பும் கொம்புத்தேன் போன்றதுதான். இருந்தும் அப்படிச் செய்வதுதான் சாதகனின் உண்மையான முயற்சி.
பயிற்சி காலத்தில் எண்ணங்களை சிறிது சிறிதாகத்தான் விட முடியும். அப்படிச் செய்து ஆன்மாவைத் தவிர வேறு பொருள் இல்லை என்று மனத்திற்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்த வேண்டும். அதாவது ஆன்மாவைப் பற்றிய எண்ணங்களை விதைக்க வேண்டும். அப்படிப் பழக்கப்படுத்திய மனது சஞ்சலமற்று இருக்கும்போது அதற்கு ஆன்மாவில் லயிக்கும் தன்மை வளர்கிறது.
அப்போது ஆன்மாவைப் பற்றியன்றி வேறெதையும் நினைக்க விடாமல் இருக்கப் பழக வேண்டும். விதவிதமான எண்ணங்கள் தோன்றலாம். ஒவ்வொரு எண்ணம் தோன்றும்போதும், அதைத் தொடர்ந்து போகாமல் அந்த எண்ணம் யாருக்கு உண்டாயின என்று கேட்டு, அப்படிப்பட்ட விசாரணையால் எண்ணத்தை நசுக்க வேண்டும். அப்படி நாம் உண்முகமாகக் கேட்கும்போது, “எண்ணம் எனக்கு என்றோ” அல்லது வேறு எதுவுமோ தோன்றலாம். அதுவும் ஒரு எண்ணமே என்பதை மறக்கக் கூடாது. ஆக இந்தக் கேள்வி கேட்பதும், பதில் வருவதும் என்ற நிலை புத்திபூர்வமாகவே நடக்கிறது என்பதையும் மறக்கக் கூடாது. அவை எல்லாமே எண்ணங்கள் என்பதால் அதை கவனித்துக் கொண்டிருக்க வேண்டுமே அல்லாது தொடரக்கூடாது. இப்படிப் பழகப் பழக, கவனித்துக் கொண்டிருப்பவனைப் பற்றிய உணர்வு தானாகவே தோன்றும். அதையே அனுபவத்தில் காண்பது என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்.
இதற்கும் மேல் அதைப் பற்றி பேசிக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருந்தால் அவைகளும் எண்ணங்கள் என்ற வகையில்தான் அமையும்; அனுபவத்திற்கு உதவாது.
ரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.
(தொடரும் …)