ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13

எப்போதும் எதையாவது எண்ணிக்கொண்டு இருப்பதுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. அந்த எண்ணப்படி தன்னிலும் வேறு என்று ஒன்றைப் பார்ப்பதுதான் முதல் படி. அந்த நான்-நீ என்ற பாவனையால், எனது-உனது என்ற வேற்றுமைகள் வளர ஆரம்பிக்கின்றன. அதனால் ஒரு பொருளை “தனது” என்று அடைய விரும்புவதுதான் ஆசை. அது கிடைக்காதோ அல்லது தன்னிடம் தங்காதோ போய்விட்டால் வருவது துக்கம். அது தனக்குக் கிடைத்தும், அது ஒருவேளை தன்னைவிட்டுப் பிறரிடம் போய்விடுமோ என்று எண்ணுவது அச்சம். தன்னிடமிருந்து பிறர் அதை எடுத்துக் கொண்டுவிட்டால் வருவது கோபம். தன்னிடமே அது இருக்கவேண்டும் என்று எண்ணுவது பற்று. மற்றவர் அதைப் பெற்றுவிட்டால் அவரிடம் நமக்கு வருவது வெறுப்பு. இப்படியான வித விதமான உணர்ச்சிகளுக்குக் காரணம் நம் எண்ணங்கள்தான்.

அத்தகைய எண்ணங்களின் தொகுப்பே மனம், அந்த மனமே தன்னை ‘நான்’ என்று அபிமானிக்கிறது. அந்த மனம் போன்ற வர்க்கத்தைச் சேர்ந்ததே பிராணன் எனும் சூக்ஷ்ம சக்தியும். ஆக உடல் எனும் ஜடப்பொருள் அல்லாது, பிராணன், மனம் எனும் சூக்ஷ்ம தேக வர்க்கங்களும் அநித்தியமானவைகள். அதனால் அவைகளும் தள்ளப்பட வேண்டியவைகளே.

ஆனால் மற்ற விஷயங்களுடன் தொடர்பு கொள்ளாது எப்போது ஒருவன் “நான்” என்று தன்னிருப்பை மட்டும் உணர்ந்து தன்னிலே இன்புற்று இருப்பானோ, அப்போது அவனுக்கு மற்ற விஷயங்களில் நாட்டமும் இருப்பது இல்லை. அவை வந்தாலும் அதனால் இன்பமும் இல்லை, போய்விட்டால் அதனால் துன்பமும் இல்லை என்று ஆகிறது. மற்றவர்கள் என்று அவனுக்குத் தெரிந்தாலும், அவர்களும் தன்னைப் போலவே இருப்பவர்கள் என்றுதான் அவனுக்கு இருக்கும். ஆத்ம ஞானம் என்பது எவருடைய தனி அனுபவம் என்றாலும் அது எந்தத் தனி மனிதருடைய சொந்தச் சொத்து அல்ல. சொத்து என்று வந்துவிட்டாலே அதற்கு சொந்தக்காரன் என்றும், அதில் பன்மையும் வந்துவிடும். ஞானம் தொன்றுதொட்டு இருக்கும் அதீத அனுபவம் என்பதாலேயே அதன் துவக்கத்தை வேதத்தினின்று காணலாம் என்பதை உணர்த்தவே இங்கு வேத வாக்கியங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 13

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12

கயிற்றை ஒருவன் பாம்பாக எண்ணுவது போல, எங்கும் பரவியுள்ள ஆன்ம வடிவான தன்னை தனித்தே விடப்பட்ட ஜீவன் என எண்ணி பயப்படுகிறான். எப்போது அவன் தான் ஜீவனல்ல, பரமாத்ம சொரூபமே என்று அறிந்து தெளிகிறானோ, அப்போதே அவன் பயம் நீங்கியவனாக ஆகிறான்…. சட்டி, பானை, குடம் போன்ற ஜடப் பொருட்கள் எங்கிருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு விளக்கு ஒன்று தேவையாவது போல, ஏக வடிவாய் இருக்கும் ஆத்மாதான் மனம், புத்தி, இந்திரியங்கள் முதலானவற்றைப் பிரகாசிக்கச் செய்யும். சுய பிரகாசமற்ற ஜடமாகிய அவைகளினால் தேஜோமயமான ஆத்மா ஒருபோதும் பிரகாசிக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்துகொள்… “எல்லா ஒளிகளிலும் அவற்றிற்கு ஒளியாவது நீ” என குரு சொல்ல, “நான் அதுவே” என்கிறான் சீடன். அந்த “நான்” என்பது “எப்போதும் அறிவோடு கூடிய தன்மயமாக இருக்கும்” ஆன்மாவிலிருந்து பெறப்பட்ட உணர்வு என்பதால், அந்த சுயம் பிரகாசமான பேரறிவை அறிவதற்கு வேறு எந்த அறிவின் துணையும் தேவை இல்லை. வேறு எதுவும் அந்தப் பேரறிவுக்கு ஒளி தருவதாகவும் இல்லை என்பதே இங்கு விளக்கப்பட்டுள்ளது. அதனாலேயே எவரும் “நான் இருக்கிறேனா?” என்று கேட்பதில்லை. தான் இருக்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டே அனைவரும் மற்ற விஷயங்களை அறிகின்றனர், பேசுகின்றனர்…

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11

சூரியன் எழுவதால் உலகில் பல காரியங்கள் நடந்தாலும், அவைகளின் பயன் சூரியனை அடையாது என்று கண்டோம். அதைப் போலவே இங்கு கிட்டத்தட்ட அசையாது நிற்கும் நிலவையும், நீரில் அதன் பிம்பத்தின் அசைவையும் எடுத்துக்கொண்டு ஆத்மாவின் சன்னிதானத்தில் காரியங்கள் இயற்றப்பட்டாலும் ஆன்மா அதற்கு பொறுப்பாகாது என்று விளக்குகிறார். ஒவ்வொருவனும் தான் ஆன்ம சொரூபம் என்பதை அறிவால் மட்டும் தெரிந்துகொண்டு, தான் செய்யும் காரியங்களையும் அதனால் அடையும் அனுபவங்களையும் “நான் செய்கிறேன்”, “நான் அனுபவிக்கிறேன்” என்று எண்ணுவதாலும், தான் ஆன்ம வடிவம் என்பதை தெரிந்து கொண்டதாலும், இயற்றப்படும் காரியங்களையும் அடையப்பெறும் அனுபவங்களையும் தேக இந்திரியங்கள் தொடர்பானவை என்று புரிந்துகொள்ளாமல், ஆத்மாவினுடையது என்று தவறாக கணிக்கிறான். ஆன்மாவிற்கு எந்தச் செயலும் கிடையாது என்பதால், இந்தக் கணிப்பு தவறானது என்பதை அசையா நிலவின் அசைவுகள் என்ற இந்த உவமையால் சங்கரர் விளக்குகிறார்.

நீர் அசைவதால் தண்ணீரில் தெரியும் சந்திரன் அசைவதுபோல் தெரிகிறதே தவிர சந்திரனே அசைவதில்லை என்பதுபோல், தேக இந்திரியங்களின் இயக்கத்தால் நடைபெறுவதை ஆன்மாவினுடையது என்று கருதுவது தவறு. அதன் உண்மை புரிவதற்கு தண்ணீரையே பார்த்துக் கொண்டிருக்கும் மனிதனின் பார்வையை நிலவின் பக்கம் திருப்புதல் அவசியம். அப்போதுதான் அவனுடைய பிரமை விலகும்.

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 10

எப்போது புத்தி அடங்கி உலகினைப் பற்றி அறிவிக்காது, நமது இருப்பைப் பற்றி மட்டுமே அறிய வைக்கிறதோ அப்போது உள்ள “நான்” எனும் உணர்வு அப்போது மட்டும் அல்லாது, எப்போதும் உள்ள தனது இயல்பே என்று உணர்ந்து, தனது எல்லா நிலைகளிலும் அப்படியே ஒருவன் இருப்பதுதான் ஞானம் அடைவது அல்லது முக்தி பெறுவது என்று சொல்வார்கள். அந்த நிலையில் ஒருவனுக்கு உலகம் என்று தனியாகத் தெரியாது; எல்லாம் தானே என்று உணரப்படும். அதனால் உலக காரியங்களில் ஈடுபடும்போதும் தனக்கே எல்லாம் செய்துகொள்வது போலவே உணரப்படும். அதனால் உலகமும், உலகில் உள்ளவைகளும் தெரிந்தாலும் அதை வேறாகப் பார்க்க மாட்டான். எப்போது உலகம் என்ற ஒன்று தனியாகத் தெரிகிறதோ அப்போது தன்னையும், தன்னைத் தவிர உலகில் உள்ள அனைத்தையும் வேறு வேறாகவேப் பார்க்கும் மனநிலை வளரும்…

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 10

ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்

வேதத்தில் ருத்திரர்களைப் போற்றும் பகுதி ருத்ரீயம் என்று அழைக்கப்படுகின்றது. இது தவிர, மானிடர்களும் தம் தவவலிமையால், உருத்திரகணத்தவராயினர் என்றும் அறிய முடிகின்றது. இவர்களிடையே பலகுழுக்கள் காணப்பட்டதால், அவர்கள் “உருத்திரபல்கணத்தர்” எனப்பட்டனர். உருத்திரர் என்பது தமிழா? சம்ஸ்கிருதச்சொல்லா..? என்பதே பேராய்விற்குரிய ஒன்றாகும். தமிழில் ‘உரு’ என்றால் மேலான என்றும், திரம் என்றால் வழி என்றும் பொருள்கொண்டு உருத்திரர் என்றால், மேலானவழிச்செல்ல முயல்பவர்கள் என்று காட்டுகின்றனர்.

இச்சாதனையாளர்களுக்கு மூன்றாவதான ஞானக்கண் திறக்கும் என்று நம்பப்பட்டது. இந்த மூன்றாவது கண்ணை ‘உருத்திரக்கண்’ என்பர். இதனால், இவர்களுக்கும் ‘உருத்திரக்கண்ணர்’ என்ற நாமம் உண்டானது.
முன்பு இருந்து மறைந்ததாக கருதப்படும் ‘லெமூரியா’ என்ற கடல் கொண்ட தமிழ்மண்ணில் வாழ்ந்த பலருக்கும் நெற்றிக்கண் இருந்தது என்றும் அவர்களே ‘உருத்திரர்’ எனப்பட்டனர் என்றும் கூட, சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வடமொழியில் ருத்ரன் என்றால், ‘அழச்செய்பவன்’ என்பது பொருளாகும். யாரை..? என்ற வினா எழும்புகிற போது, தீயவர்களை என்று குறிப்பிடுவர். இதைவிட, ருத்ரன் என்பவன் துன்பத்தை ஓட்டுபவன் என்றும் குறிப்பிடுவர்.

சிவனால், அர்ச்சுனனுக்கு வழங்கப்பட்டது பாசுபதாஸ்திரம், ஆனால், சிவனால் முருகனுக்கு வழங்கப்பெற்றது “ருத்ரபாசுபதாஸ்திரம்” என்ற மஹாஸ்திரம் என்று கந்தபுராணம் சொல்வதும் இங்கு சிந்திக்கத்தக்கது.

View More ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும்

புருஷ சூக்தம்

புருஷனே ஆகுதியாக வேள்வி செய்தனர் தேவர்கள் – வசந்தம் நெய்யாக, கோடை விறகாக, சரத்காலம் அவியுணவாக ஒரு வேள்வி… பிராமணன் முகமானான் – கைகள் அரசன் – தொடைகள் வைசியன் – பாதங்களில் சூத்திரன் தோன்றினான்… பரம்பொருளே சிருஷ்டியின் கூறுகளாக வியாபித்திருக்கிறார் என்று போற்றிப் புகழ்கிறது இந்தப் பாடல். புருஷன் ஒவ்வொரு உயிரின் விழிகளாலும் பார்க்கிறான், ஒவ்வொரு உயிரின் பாதங்களாலும் நடக்கிறான். முடிவற்று விரிந்து செல்லும் விண்வெளி புருஷனின் தொப்புள் என்று கூறியது அபாரமான அழகியல்… வர்ணங்களை வைத்து உண்டான ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இதில் கற்பிக்கப் படவில்லை. வேதங்களில் எங்கு தேடினாலும் பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகள் மற்றும் வர்ண ஏற்றத் தாழ்வுகளுக்கான சான்றுகள் கிடைக்காது…

View More புருஷ சூக்தம்

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 8

புனிதமான கங்கையில் குளித்துவிட்டு ஆச்சாரியார் தன் சீடர்களுடன் வரும்போது, எதிரே ஒரு புலையன் நான்கு நாய்களைப் பிடித்துக் கொண்டு வருகிறான். சீடர்கள் அவனை அவர் மேல் படாதவாறு ஒதுங்கச் சொல்ல, அப்போது அவன் சங்கரரைப் பார்த்து இப்படிக் கேட்கிறான்: “யதிகளில் சிறந்தோரே, அன்ன மயத்தாலான இந்த சரீரத்தை அன்ன மயமான இன்னுமொரு சரீரத்திலிருந்து விலகச் சொல்கிறீர்களா? அல்லது ஒரு சைதன்ய சொரூபத்தில் இருந்து இன்னொரு சைதன்ய சொரூபத்தை அகலும்படிச் சொல்கிறீர்களா? கங்கை நதியில் பிரதிபலிக்கும் சந்திரனின் பிம்பம், சண்டாளனின் குடிசையின் பக்கத்தில் இருக்கும் குளத்தில் பிரதிபலிக்கும் சந்திரனின் பிம்பத்திலிருந்து வேறாகுமோ? பொன் குடத்தின் உள்ளே இருக்கும் ஆகாசம் மண் குடத்தில் உள்ளதிலிருந்து வேறுபடுமோ? எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சத்திய ஆனந்த போதத்தில் திளைத்திருக்கும் உம்மிடம் “இவன் மேலோன், அவன் கீழோன்” என்ற பெரும் மயக்கம் எப்படித் தோன்றுகிறது?” இதைக் கேட்ட ஆச்சாரியார் தன் மனம் ஆன்மாவின் உன்னத நிலையை மறந்து உடலின் தூய்மை பற்றிய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி பாமரத் தன்மை அடைந்ததை உணர்கிறார். அதனை அகற்றி, “பரம்பொருளின் தன்மையை உணர்ந்து உறுதியான போதத்துடன் இருப்பவர் சண்டாளர் ஆயினும், அந்தணர் ஆயினும் அவரை என் குருவெனப் போற்றுகின்றேன்” என்று ஈற்றடி வருமாறு “மனீஷா பஞ்சகம்” என்ற ஐந்து ஸ்லோகங்களை இயற்றுகிறார். ஆக உடல்-ஆன்மா குழப்பம் எப்போதும் வராதவாறு நம்மைக் கண்காணித்துக் கொள்ள வேண்டும்…..

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 8

ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1

”அமுதம் அவன் நிழல் மரணமும் அவன் நிழல் – எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?…இருளை இருள் மறைத்திருந்தது ஆதியில் – பிரித்தறிய முடியாதபடி இவை எங்கும்நீராக இருந்தது – வடிவற்ற வெறுமையே எங்குமிருந்தது – அதிலிருந்து மகத்தான தவத்தால் அந்த ஒன்று பிறந்தது… தேவர்களோ படைப்பிற்குப் பின்வந்தவர்கள் – அப்படியானால் அது எப்படி உருவாயிற்று? யாரறிவார்?”… சிருஷ்டி உண்மையில் எப்படி உண்டாயிற்று, யார் அதனை உருவாக்கிய கடவுள் என்ற ஆதிக் கேள்வியையே இந்தப் பாடல் போற்றுகிறது என்று வேத இலக்கியம் குறித்து எழுதிய நவீன அறிஞர்கள் கருதுகின்றனர். பிற்காலத்தில் வளர்ந்து செழித்த இந்திய தத்துவ ஞானப் பிரிவுகள் அனைத்தும் எழுப்பிய அடிப்படைக் கேள்விகளின் ஆரம்பப் புள்ளி இந்த சூக்தங்கள் தான்…

View More ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் -7

எந்த ஒரு பொருளுக்கும், செயலுக்கும் அவை ஏற்பட பல காரணங்கள் இருக்கும். ஒரு குயவன் பானையைச் செய்யும்போது அதற்கு பல விதமான பொருட்களும் தேவை என்றாலும் அவைகளுள் மண் மூலப் பொருளாய் உள்ளதால் அது முதற் காரணம் (உபாதான காரணம்) எனப்படுகிறது. பானையைச் செய்யும் குயவனின் புத்தியிலேயே அதை உருவாக்கப் போகும் திட்டம் உள்ளதால் குயவனை நிமித்த காரணம் என்று சொல்வார்கள். அப்படிப் பார்க்கும்போது, நீர் குமிழி ஒன்று கிளம்புவதற்கு தண்ணீர்தான் முதல் காரணமாக அமைகிறது. அந்த நீர்க் குமிழியின் வாழ்க்கைச் சக்கரத்தை வைத்துக் கொண்டு இங்கு மேலும் விளக்கம் வருகிறது.

நீரின் மேற்பரப்பில் புறப்பட்டு எழும் நீர்க்குமிழியை அது கிளம்பும் நீரை விட்டுவிட்டுத் தனியே பார்க்க முடியுமா? எப்படி அது நீரிலிருந்தே புறப்பட்டு, நீரிலேயே சில நொடிகள் இருந்து, பின்பு அது வெடித்துச் சிதறும்போது நீரிலேயே கலக்கிறதோ அதே போன்று பிரபஞ்சமும், அதில் உள்ள அனைத்தும் முழு முதற் காரணமான பரமேஸ்வரனிடத்தில் இருந்து புறப்பட்டு, அவனுடனேயே இருப்பதை அறியாதபோதும் அவனுடனேயே இருந்து, மறையும் போதும் அவனுடனேயே கலக்கின்றன.

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் -7

[பாகம் 25] காமகோடி பீடம் – சுவாமி சித்பவானந்தர்

ஒரறிவு படைத்த உயிர்கள் இப் பிரபஞ்சத்தைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு ஆசைப்பட்டு ஈரறிவு படைத்த உயிர்களாகவும பின் அவைகள் மூன்று, நான்கு, ஐந்து, ஆறறிவு படைத்த உயிர்களாகப் பரிணமித்து வருகின்றன. இத்தகைய பரிணாமத்தின் உச்சநிலையில் இருப்பவன் மனிதன் ஆகின்றான். இனி மனிதனிலும் மிக்கதோர் உயிர் வகையை இப்பூவுலகில் யாரும் பார்த்ததில்லை. இப்பூவுலக அமைப்பில் மனிதனே அதிகமான இந்திரியங்களும், விரிந்து செயலாற்றக் கூடிய அந்தக்கரணமும் வாய்க்கப் பெற்றவனாக இருக்கிறான். இனி, மனித நிலைக்கும் மேலான ஒரு நிலை உண்டு. அது தெய்வீக நிலை எனப்படும். மனம் மனிதனிடத்து ஓயாது அலையும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. ஆகையால் தான் மனிதன் அநேக காமங்களுக்கு ஆளாகிறான். அக்காமங்களைத் தெய்வீகக் காமமாக மனிதன் மாற்றியமைக்கத் தெரிந்து கொண்டால் காமத்தின் வேகம் குறைகிறது. காமம் முற்றிலும் அகன்றவிடத்து மனிதன் தெய்வ சொரூபமாகிவிடுகிறான். மனிதநிலையில் இருக்கும் நாம் இந்த மேலாம் நிலையை அடைய முயற்சி எடுத்துக்கொண்டு அந்நிலையை யடைகிறபொழுது நம்முடைய காமத்துக்கும் ஒரு முடிவு உண்டாகிறது. மனித இனத்தில் ஓர் உத்தமர் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியயண்ணி ஏழை நெஞ்சம் புண்ணாகச் செய்தது இனிப் போதும் பராபரமே என்று இறைவனிடம் பரிந்து விண்ணப்பிக்கிறார். கண்ணா! மனம் அலையும் தன்மையது : திடமுடையது ; அதை அடக்குவது காற்றை அடக்குவது போன்று இயலாதது என்று நினைக்கிறேன் என்கிறான் மஹாரதனாகிய அர்ஜூனன்.

சிற்றுயிர் பேருயிராகப் பரிணமித்து வர ஆசை பயன்பட்டது. மானுட நிலையில் ஆசை இருவிதப்படுகிறது. மனிதனைப் பந்தத்தில் தள்ளவும், பாரமார்த்திக நெறிக்கு எடுத்துச்செல்லவும் ஆசை மனிதனுக்குப் பயன்படுகிறது. இந்த ஆசைக்கு இருப்பிடம் மனது ஆகும். இந்த மனது என்பது யாது? அதன் இயல்பு என்ன? மானுட நிலையில் அதை உயர்ந்ததோர் காரியத்துக்குப் பயன்படுத்துவது எப்படி, என்பனவற்றை ஆராய்வோம்.

View More [பாகம் 25] காமகோடி பீடம் – சுவாமி சித்பவானந்தர்