[பாகம் -28] காரல் மார்க்சு கம்யூனிசம் உலகை அழிக்கும் – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 28-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

‘‘நமது வெளிநாட்டுக் கொள்கைகளில் சீனா பற்றிய நம் கண்ணோட்டம் பல நாடுகளை நமது விரோதிகளாக்கிவிட்டன. ஐ.நா.வில் சீனா நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா போராட வேண்டி வந்துள்ளது. இது ஓர் அசாதாரணமான விஷயம். இந்தப் போராட்டத்தை நடத்த சீனாவுக்கு வலிமை இருக்கும்போது ஏன் இதற்காக இந்தியா போராட வேண்டும்? கம்யூனிஸ்டு சீனாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவதே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் பகைமை உணர்ச்சிக்குக் காரணம். இதன் விளைவாக அமெரிக்காவிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நாம் பெற முடிவதில்லை.

…..தன் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதே இந்தியாவின் தலையாய கடமை. ஐ.நா.வில் சீனா நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்குப் போராடுவதற்குப் பதிலாக, தான் ஐ.நா.வின் நிரந்த உறுப்பினராவதற்கு இந்தியா பாடுபட வேண்டும். இதைச் செய்வதற்குப் பதிலாக சியாங்கேஷேக்குக்கு எதிரான மாவோவின் போராட்டத்தில் இந்தியா தன் சக்தியை விரயம் செய்கிறது. உலக ரட்சகனாக நடந்து கொள்ளும் இந்தப் பைத்தியக்காரக் கொள்கை இந்தியாவிற்கு அழிவையே கொண்டுவரும். தற்கொலைக்கொப்பான இந்த வெளிநாட்டுக் கொள்கை எவ்வளவு சீக்கிரம் மாற்றப்படுகிறதோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு நன்மை உண்டாகும். ஆசிய நாடுகளின் பிரச்சினைகளுக்கு குரல் எழுப்புவதற்கு முன்பு இந்தியா தன்னைப் பலப்படுத்திக் கொள்ள எல்லா உதவிகளையும் பெற கடுமையாகப் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் அதன் குரலுக்கு மதிப்பு இருக்கும். இத்தகைய வெளிநாட்டுக் கொள்கையையே ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் கடைபிடிக்கும்.’’

அதாவது இந்திய கம்யூனிசம் மட்டுமல்ல கம்யூனிச சீனா, கம்யூனிச ரஷ்யா போன்ற கம்யூனிசம் கோலோச்சுகிற நாடுகளையும் அவர் நம்பவில்லை.

இந்தியாவின் இரண்டாவது தலைநகரம் அமைவது பற்றி எழுதுகையில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்:

“இந்தியாவும் சீனாவும் இப்போது இப்போது நட்புநாடுகளாக இருந்தாலும் இந்த நட்புறவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யாராலும் திட்டவட்டமாகக் கூற முடியாது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு எப்போதும் இருக்கவே செய்கிறது,’’

என்று – “மொழிவாரி மாநிலங்கள் பற்றிய சிந்தனைகள்” (1955) நூலில் கூறுகிறார்.

 

1956 ஆகஸ்டு 26-ஆம் நாள் அம்பேத்கர் மாநிலங்கள் அவையின் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கை பற்றி சிந்திக்க வைக்கும்படியான சிறந்ததோர் உரையாற்றினார்.

அம்பேத்கர் பேசும்போது, ‘‘நேருவின் வெளியுறவுக்கொள்கை மூன்று கோட்பாடுகளை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. முதலாவது அமைதி, இரண்டாவது கம்யூனிசத்திற்கும் சுதந்திர ஜனநாயகத்திற்கும் இடையிலான இணக்கம், மூன்றாவது சீட்டோ அமைப்பிற்கான எதிர்ப்பு,” என்று கூறினார்.

“ரஷ்யா பத்து ஐரோப்பிய நாடுகளைத் தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. மேலும் சீனா, மஞ்சூரியா, கொரியா ஆகிய நாடுகளின் சில நிலப்பரப்புகளையும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது,” என்று அம்பேத்கர் கூறியபோது, கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஒருவர் அதை மறுத்துக் குரலெழுப்பினார். நாடுகளைப் பிரிப்பதன் பெயராலோ அல்லது நாடுகளைப் பிரித்துத் தனிமைப்படுத்துவதாலோ அமைதி விலை கொடுத்து வாங்கப்படுகிறது என்று அம்பேத்கர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவைப் பற்றி அம்பேத்கர் பேசியபோது,

“ரஷ்யா பல நாடுகளை இல்லாமல் ஆக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. விடுதலை அளிப்பது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மற்ற நாடுகளைத் தன் நாட்டுடன் சேர்த்துக் கொள்கிறது. மற்ற நாடுகளுக்கு ரஷ்யா வழங்கும் விடுதலை என்பது, விடுதலையின் பேராலான அடிமைத்தனம் என்பதாகவே இருக்கிறது. விடுதலைக்குப் பிறகு அங்கே சுதந்திரம் முகிழ்ப்பதில்லை. இத்தகைய அமைதியினால் எந்தவொரு பயனும் விளைவதில்லை. மாறாக ரஷ்யா பூதம் வாயைத் திறந்து இரை கேட்கும் போதெல்லாம் அதற்குப் பிற நாடுகள் பலியாக்கப்படுகின்றன…”

என்று கூறினார்.

ரஷ்யா இந்தியா மீதும் இதேபோல் கை வைக்குமா? என்ற கேள்வியை மறந்துவிடாமல், புறக்கணித்துவிடாமல் இந்தியர்கள் நினைவில் கொண்டிருக்க வேண்டும் என்று அம்பேத்கர் எச்சரித்தார்.

“கம்யூனிசமும் சுதந்திர ஜனநாயகமும் ஒன்றிணைந்து செயல்படும் என்று கூறப்படுவது அறிவுக்குப் பொருந்தாக் கூற்று என்பதே என் கருத்தாகும். ஏனெனில் கம்யூனிசம் ஒரு காட்டுத்தீயைப் போன்றதாகும். தன்னை எதிர்ப்படும் எல்லாவற்றையும் எரித்து அழித்துவிடும்”

என்று அம்பேத்கர் கூறினார். காட்டுத்தீ போன்று விளங்கும் ரஷ்யாவிற்கு அருகிலுள்ள நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வகுக்கும்போது அந்நாட்டின் நிலவியல் அமைப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள மறந்துவிடக்கூடாது என்று அம்பேத்கர் சுட்டிக்காட்டினார்.

“…ரஷ்யாவும் சீனாவும் இவ்வுலகில் சுதந்திரமாகவுள்ள மற்ற நாடுகளை ஆக்கிரமிப்புச் செய்து கைப்பற்றிக் கொள்வதைத் தடுப்பதற்காக ‘சீட்டோ’ என்ற அமைப்பை உருவாக்கிட அமெரிக்காவும், பிரிட்டனும் திட்டமிட்டன”

“சீட்டோ அமைப்பு எந்தவொரு நாட்டின்மீதும் ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதன்று. மாறாக சுதந்திர நாடுகளின்மீது ஆக்கிரமிப்புச் செய்யப்படுவதைத் தடுப்பதே அதன் குறிக்கோளாகும் என்று அம்பேத்கர் விளக்கினார். சீட்டோ அமைப்பின்பால் காட்டப்படுகின்ற வெறுப்பு, நேருவிற்கு அமெரிக்காவிடம் ஏதோ ஒருவகையில் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாகவும் இந்தியா சீட்டோ அமைப்பில் சேர்ந்துவிட்டால் ரஷ்யா என்ன நினைக்குமோ என்ற அச்சத்தினாலும் தோன்றியதாகும்”

 என்று அம்பேத்கர் கூறினார்.

இந்தியாவை ஒருபுறத்தில் பாகிஸ்தானும், மற்ற இஸ்லாமிய நாடுகளும் சூழ்ந்திருப்பதையும், இன்னொரு பக்கத்தில் சீனா லாஸா பகுதியைக் கைப்பற்றிக் கொள்ள அனுமதித்திருப்பதையும் அம்பேத்கர், அவையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

“சீனா அதனுடைய எல்லையை இந்தியாவின் எல்லை வரையில் கொண்டுவந்துவிட பிரதமர் அனுமதித்து விட்டார். இந்த உண்மைகளையெல்லாம் ஒருசேர நினைக்கும் போது, உடனடியாக என்று கூற முடியாவிடினும் எதிர்காலத்தில் இந்தியா ஆக்கிரமிப்புக்குள்ளாகும் அபாயம் இருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பை யார் செய்வார்களெனில் ஆக்கிரமிப்புச் செய்வதையே வழக்கமாக்கிக் கொண்டவர்கள் செய்வார்கள்”

என்று அம்பேத்கர் உறுதிபடக் கூறினார்.

 

“பிரதமர் நேரு மாசேதுங் ஒப்புக்கொண்ட பஞ்சசீலக் கொள்கையையோ, ஒருநாடு மற்ற நாட்டின்மீது ஆக்கிரமிப்புச் செய்யக்கூடாது என்று திபெத்தில் செய்துகொண்ட ஒப்பந்தத்தையோ நம்பக்கூடாது”

என்று அம்பேத்கர் அவருடைய உரையில் குறிப்பிட்டார்.

 

“பௌத்த சமயத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் பஞ்சசீலக் கொள்கையின்பால் உண்மையில் மாசேதுங்கிற்கு நம்பிக்கையிருக்குமானால் அவருடைய நாட்டில் பௌத்தர்களை இப்போது நடத்துவதுபோல் கொடுமையாக நடத்தியிருக்கமாட்டார். அரசியலில் பஞ்சசீலக் கொள்கைக்கு இடமேயில்லை. கம்யூனிச நாட்டின் அரசியலில் பஞ்சசீல கொள்கை இடம்பெறவே முடியாது. கம்யூனிச நாடுகள் இரண்டு கொள்கைகளின் மீதே எப்போதும் செயல்படுகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கம்யூனிச நாடுகளில் ஒழுக்கநெறி என்பது மாறிக்கொண்டேயிருக்கும். ஆகவே ஒழுக்கநெறி என்ற ஒன்றே இருக்காது. இன்று ஒழுக்கநெறியாகக் கருதப்படுவது, அடுத்தநாளே ஒழுக்கநெறிக்குரியதாக இல்லாமல் ஆகிவிடும். ஆசியா ஒரு போர்க்களமாக ஆகிவிட்டது. ஆசியாவில் பாதிக்கு மேற்பட்டவை கம்யூனிச நாடுகளாக இருக்கின்றன. கம்யூனிச நாடுகள் மாறுபட்ட வாழ்வியல் கோட்பாடுகளையும் வேறுபட்ட அரசமைப்பு முறையையும் பின்பற்றுகின்றன. ஆகவே நமக்குச் சுதந்திரத்தில் நம்பிக்கையிருகுமாயின் சுதந்திர நாடுகள் என்று கருதப்படும் நாடுகளுடன் நாம் கூட்டு வைத்துக்கொள்வது நல்லது”

என்று அம்பேத்கர் கூறினார்.

 

அம்பேத்கரின் தீர்க்கதரிசனம் இந்தியா மீது 1962-இல் சீனா படையெடுத்தபோது நமக்கு வெளிப்பட்டது.

மறுபடியும் 1951, நவம்பர் 7 அன்று பி.டி.ஐ-க்கு அளித்த பேட்டியில் அம்பேத்கர்,

‘‘நான் கம்யூனிசத்தில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை என்ற ஒளிவுமறைவற்ற காரணத்தினால் என் கட்சி எக்காரணத்தைக்கொண்டும் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி அமைக்காது’’

என்று கூறினார்.

 

அம்பேத்கர் கம்யூனிசத்துக்கு மிக வைரியாக இருந்தார். கம்யூனிசத்தின்பால் அவருடைய கவனம் எப்போதும் சென்றதில்லை. கடுமையான வார்த்தைகளால் கம்யூனிசத் தத்துவத்தை விளாசினார்.

இந்தியாவின் சிறந்த தேசபக்தரும், சீர்திருத்தவாதியுமான ரானடேயின் பிறந்தநாளையொட்டி, 1943 ஜனவரி 19-ஆம் தேதி பூனாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அம்பேத்கர் பேசும்போது,

“ஆண்டவனின் புனிதத் திட்டத்தின்படிதான் வரலாறு நடந்து கொண்டிருக்கிறது. தீர்ப்பு நாளின்போது, இப்புனிதத் திட்டம் முடிவுக்கு வரும்வரையில் மனித சமுதாயம் போர்களிலும், துன்பங்களிலும் உழன்று கொண்டுதானிருக்கும் என்பது ஆகஸ்டைன் கூறும் தத்துவம். இது இன்று மதவாதிகளின் நம்பிக்கையாக மட்டுமே இருக்கின்றது. பக்ளியின் தத்துவம், வரலாற்றை நிலவியலும், இயற்பியலும் உருவாக்குகின்றன என்று சொல்கிறது. காரல் மார்க்சின் கம்யூனிசத் தத்துவமோ பொருளாதாரச் சக்திகளே வரலாற்றை தீர்மானிக்கின்றன என்று கூறுகிறது. இவ்விரண்டு தத்துவங்களும் முழுமையான உண்மைகளைக் கொண்டிருக்கவில்லை. மனிதனுக்கு வெளியே உள்ள சக்திகளே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன என்றும், வரலாற்றின் நிகழ்வுகளை முடிவு செய்வதில் மனிதன் ஒரு சக்தியாக இல்லையென்றும் இவர்கள் கூறுவது முற்றிலும் தவறாகும்,’’

என்று கூறினார்.

 

1951-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் நாள் ஜலந்தர் நகரிலுள்ள டி.ஏ.வி.கல்லூரியில் நடைபெற்ற ‘மாணவர் நாடாளுமன்ற’த்தில் அம்பேத்கர் பேசியதாவது,

‘‘இந்த நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுப்போனால் நான் குறிப்பிட்ட காரணங்களால் அது தோற்றுத்தான் போகும். அதன் விளைவாக கலகம், அராஜகம், கம்யூனிசம் தோன்றும். வாரிசு வழி அதிகாரத்தை மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்று ஆட்சியிலுள்ளவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் இந்நாடு அழிந்தே போகும். கம்யூனிசம் இங்கு வரலாம். ரஷ்யா நமது நாட்டில் மேலாண்மை பெற்று தனிமனித சுதந்திரத்தை நசுக்கி, நமது சுதந்திரத்தையும் ஒழித்துவிடும். அல்லது ஆட்சியதிகாரத்திலிருக்கும் கட்சி தோல்வியடைந்தால் அதிருப்தியுற்ற ஒரு பிரிவு மக்கள் கலகத்தில் ஈடுபடலாம், அராஜகம் அப்போது தலைதூக்கும்.’’

என்றார்.

 

மகாராஷ்டிராவில் கம்யூனிஸ்டுகளின் பலவீனங்கள் பற்றி 1953 பிப்ரவரி 21, 28, மற்றும் அக்டோபர் 9-ஆம் தேதிகளில் அமெரிக்கப் பத்திரிகையாளர் திரு.சீலிங் எஸ்.ஹாரிசன், டாக்டர் அம்பேத்கரிடம் பேட்டி எடுத்தார். அந்தப் பேட்டியில்,

“திரு.டாங்கே மற்றும் இதர பிராமண இளைஞர்களின் கைகளில் ஆரம்பத்தில் கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. மராத்தா சமூகத்தையும் ஷெட்யூல்டு வகுப்பினர்களையும் தங்கள் பக்கம் கொண்டுவர அவர்கள் முயன்றனர். ஆனால் மகாராஷ்டிராவில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஏன்? பெரும்பாலும் அவர்கள் பிராமண இளைஞர்களின் கூட்டமே. இந்தியாவில் கம்யூனிஸ்டு இயக்கத்தை வளர்க்க அவர்களை நம்பியது ரஷ்யர்கள் செய்த பெரும் தவறு. இந்தியாவில் கம்யூனிசம் வளர்வதை ரஷ்யர்கள் விரும்பவில்லையா- அவர்கள் வெறும் ஜால்ராக்களை விரும்பியிருக்கலாம் அல்லது அவர்கள் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம்.’’

என்று கூறினார்.

கம்யூனிசத்தைப் பற்றிய புரிதல் அம்பேத்கருக்கு எந்த அளவுக்கு இருந்தது என்பது பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவர் 1956, மே 12-இல் புதுடெல்லியில் வெளியிட்ட ‘புத்த மதத்தை நான் ஏன் விரும்புகிறேன்’ என்ற அறிக்கையில் நாம் காணலாம். அதில் குறிப்பிடுகிறார்:

‘‘…. வேறு எந்தமதமும் செய்யாத விதத்தில் புத்தமதம் மூன்று கோட்பாடுகளை இணைத்துப் பிணைத்துத் தருகிறது. எல்லா மதங்களும் கடவுளையும், ஆன்மாவையும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையையும் பற்றியே அலட்டிக்கொண்டிருக்கின்றன. புத்தமதம் அல்லது பௌத்தம் பிரக்ஞையை (மூடநம்பிக்கையையும் இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கையை வைப்பதையும் எதிர்ப்பதை) போதிக்கிறது. அது கருணையை போதிக்கிறது. அது சமதாவை (சமத்துவத்தை) போதிக்கிறது. இந்தப் பூவுலகில் ஒரு நல்ல, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நடத்துவதற்கு மனிதன் இதைத்தான் விரும்புகிறான். புத்தமதத்தின் இந்த மூன்று கோட்பாடுகளும் என்னைப் பெரிதும் கவர்கின்றன.’’

என்று கூறுகிற அம்பேத்கர் கம்யூனிசத்தின் தாக்கத்தையும் அதில் குறிப்பிட்டு அதை விமர்சிக்கிறார்.

‘‘….. உலகை அழிக்கும், குறிப்பாக அதன் தென்கிழக்கு ஆசியப் பகுதியைப் பாதிக்கும் மூன்றாவது அம்சம் ஒன்று உள்ளது. காரல் மார்க்சும் அவர் ஈன்றெடுத்த கம்யூனிசமும்தான் அந்த மூன்றாவது அம்சம். இதன் தாக்கம் கடுமையாக உள்ளது. மார்க்சியமும் கம்யூனிசமும் சமயசார்பற்ற விவகாரங்கள் சம்பந்தப்பட்டவை.

இவை அனைத்து நாடுகளின் சமயசார்பு அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம்காணச் செய்துள்ளன. சமயசார்பு அமைப்புக்கு இது முற்றிலும் இயல்பானதே. இன்றைய நிலைமை சமயசார்பற்ற அமைப்புடன் சம்பந்தப்படாது இருந்தாலும், அதன் அடித்தளத்தின் மீதுதான் சமயசார்பற்றவை அனைத்துமே அமைந்துள்ளன. சமயத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தாலொழிய சமயசார்பின்மை அமைப்பு நீண்டகாலம் நீடிக்க முடியாது. சமயத்தின் அங்கீகாரம் கிடைப்பதே அரிது.

தென்கிழக்கு ஆசியாவிலுள்ள பௌத்தமத நாடுகளின் மனப்போக்கு கம்யூனிசத்தின் பக்கம் சாய்ந்திருப்பது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. பௌத்தமதம் என்பது என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதே இதன் பொருள். என்னைப் பொருத்தவரையில் பௌத்தமதம் மார்க்சுக்கும் அவரது கம்யூனிசத்துக்கும் ஒரு மாபெரும் சவால் என்று கூறுவேன்.

ரஷ்ய பாணி கம்யூனிசம் இரத்தக்களறியான ஒரு புரட்சியின் மூலம் அதனைச் சாதிக்க முயல்கிறது. பௌத்த கம்யூனிசமோ, இரத்தம் சிந்தாத மனப்புரட்சியின் வாயிலாக அதனைக் கொண்டுவருகிறது. கம்யூனிசத்தைத் தழுவ ஆர்வத்தோடு இருப்பவர்கள், சங்கம் ஒரு கம்யூனிச அமைப்புதான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதில் தனிச்சொத்துடைமை ஏதும் இல்லை. வன்முறை மூலம் இது சாத்தியப்படவில்லை. மனமாற்றத்தின் மூலமாகவே இது சாதிக்கப்பட்டது. எனினும் 2500 ஆண்டுகளாக அது நிலைத்து நின்று வருகிறது. ஒருக்கால் அது சிதைந்திருக்கலாம். ஆனால் அது இன்னமும் நிலைத்து நின்று வருகிறது. இது எவ்வாறு சாத்தியமாயிற்று?

இந்தக் கேள்விக்கு ரஷ்ய கம்யூனிசம் பதிலளிக்க வேண்டும். வேறு இரண்டு கேள்விகளுக்கும் அவர்கள் பதில் கூறியாக வேண்டும். முதலாவதாக எல்லாக் காலத்துக்கும் கம்யூனிச அமைப்பு முறை ஏன் தேவை? ரஷ்யர்கள் என்றும் செய்யமுடியாத பணியைச் செய்துமுடித்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. பணி முடிந்த பிறகு புத்தர் போதித்தது போல் அன்பைத் தொடர்ந்து, மக்களுக்கு ஏன் சுதந்திரம் அளிக்கவில்லை? எனவே, தென்கிழக்கு ஆசிய நாடுகள் அவசரப்பட்டு ரஷ்யவலையில் குதித்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவ்வாறு குதித்தார்களானால் அவர்களால் ஒருபோதும் அதிலிருந்து தப்பி வெளியேற இயலாது. இப்போது அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் புத்தரையும் அவரது வாழ்க்கையையும் அவரது போதனைகளையும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்….’’

இந்த அறிக்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல ஆசிய நாடுகளுக்கும் ஓர் எச்சரிக்கை. அம்பேத்கர் எந்த அளவுக்க கம்யூனிசத்துக்கு வைரியாக இருந்தார் என்பது இதிலிருந்து புலப்படும்.

(தொடரும்…)

 

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

பாகம் 1 முதல் 6 வரை இந்துமதத்தைச் சீர்திருத்த முயன்ற அம்பேத்கர், அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, தலித் தலைவர்களின் நிராகரிப்பையும் மீறி மதமாற்றத்தையே தீர்வாக அறிவித்ததையும், அதன் ஆன்மிகப் பயன்களாக அவர் சொன்னவைகளையும் பார்த்தோம்.

பாகம் 7 முதல் 10 வரை, தீண்டத்தகாதவர்களுக்கான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அரசியல் காரணங்கள், அதை இந்துமதத்திற்குள்ளிருந்து தீர்க்கமுடியாததென அவர் நம்புவதற்கான அவரது வாதங்கள், தகுதிவாய்ந்த தலித் ஒருவருக்கு ஒருவருட சங்கராச்சாரிய பதவிக்கான வேண்டுகோள், மதமாற்றத்திற்கு இஸ்லாமைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அவருக்கு வந்த மறைமுக அழைப்பு, நேரடி அழுத்தம் ஆகியவற்றைப் பார்த்தோம்.

பாகம் 11 முதல் 13 வரை, இந்துமதத்தின் மாற்றாக சீக்கிய மதத்தை அவர் சிந்தித்தது, கிறித்துவ நிறுவன அமைப்பை ஒதுக்கியது, மதமாற்ற வாய்ப்பை ஆக்கிரமிக்க ஐரோப்பியர்கள் செய்த உத்தி ஆகியவற்றைப் பார்த்தோம்.

பகுதி 14 முதல் 18 வரை, இஸ்லாம்– அடிமைகளை உருவாக்குவது, பெண்களை கீழ்த்தர துயரநிலையில் வைப்பது, மனநோய் பரப்புவது, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டைபோடும் பிற்போக்கானது, பகுத்தறிவுக்கு எதிரான ஷரியா சட்டம் கொண்டது, தேச பக்தி, தேசியக் கண்ணோட்டத்திற்கு எதிரானது என்பதான அவரது வாதங்களைப் பார்த்தோம்.

பகுதி 19 முதல் பாகம் 24 வரை, நடைமுறைக்கு ஒவ்வாத இஸ்லாமியத் தலைவர்கள், இஸ்லாமியர்களின் இந்துஅரசுக்குக் கீழ்ப்படியாமை குணம், இந்தியப் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள், இஸ்லாமிய மன்னர்களால் இந்தியாவில் ஏற்பட்ட சமய, கலாசாரச் சீரழிவு, வன்கொடுமைகள், கொலை, கொள்ளை ஆகியவற்றைப் பற்றிய அவரது தீவிரமான கருத்துகளைப் பார்த்தோம்.

பாகம் 25, 26-இல் இந்துவை வெறுக்க இஸ்லாமை தவறு என்று தன் வருத்தத்தையும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்துவிட்டது எவ்வளவு அவசர அவசியம் என்று தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்கிறார்.

பாகம் 27 தொடங்கி கம்யூனிஸத்திற்கான அவரது மாற்றுக்கருத்துகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19 || பாகம் 20 || பாகம் 21 || பாகம் 22 || பாகம் 23 || பாகம் 24 || பாகம் 25 || பாகம் 26 || பாகம் 27

4 Replies to “[பாகம் -28] காரல் மார்க்சு கம்யூனிசம் உலகை அழிக்கும் – அம்பேத்கர்”

  1. மிக சுவாரசியமான தகவல்கள். திரு வெங்கடேசனுக்கு நன்றி. தொடரட்டும் இவர் ஆய்வுத் தொண்டு.

  2. அனைவருக்கும் இந்து எழுச்சி நாள் நல்வாழ்த்துக்கள் !

    Wish you a very happy Hindu dignity day !

  3. கம்யூனிசம் என்பது மனித இனத்துக்கே எதிரானது என்பதால் தான் எல்லா நாடுகளும் அதனை கை விட்டுவிட்டன. சீனாவில் கூட கம்யூனிசம் ஒழிக்கப்பட்டு, தனியார் சொத்துரிமை வழங்கப்பட்டு விட்டது. சீனாவில் கம்யூனிசம் என்ற பெயரை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு முதலாளித்துவ நாடு போலவே ஆகிவருகிறது.

    தனிமனிதனின் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை இவற்றை அனுமதிக்காத எந்த ஒரு அமைப்பும், அது மன்னர் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி, ராணுவ ஆட்சி, ஒரு குடும்ப ஆட்சி, கம்யூனிச ஆட்சி எதுவாயினும் நிலைக்காது. உண்மையான ஜனநாயகம் அதாவது மக்களாட்சி மட்டுமே உலகெங்கும் பரவும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  4. நேரு ஒரு வடிகட்டிய முட்டாள். அம்பேதுகர் இவ்வளவு சொல்லியும் அவரது மரமண்டைக்கு உறைக்கவே இல்லை. கடைசியில் நமது பகுதிகளை சீன ஆட்டைய போட்டது தான் மிச்சம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *